தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: ஆகாச பைரவா!

விசேஷம் இது வித்தியாசம்: ஆகாச பைரவா!

விசேஷம் இது வித்தியாசம்: ஆகாச பைரவா!


PUBLISHED ON : நவ 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிச.,1 பைரவாஷ்டமி

சி வனின் உக்ர அம்சமாகத் திகழ்பவர், பைரவர். எல்லா சிவாலயங்களிலும், பைரவருக்கு தனி சன்னிதி இருக்கும். இவரே, கோவிலின் காவல் தெய்வம். சில ஊர்களில், பைரவருக்கு தனிக்கோவில்களும் உள்ளன. ஆனால், மிகவும் வித்தியாசமாக ஒரு மலை சிகரத்தை, பைரவராகக் கருதி வழிபடுகின்றனர், கர்நாடக பக்தர்கள்.

ஆதிசுஞ்சனகிரி என்று அழைக்கப்படும் இந்த மலை, பெங்களூருவிலிருந்து 110 கி.மீ., துாரத்தில் உள்ளது. இந்த மலையின் உயரம், 3221 அடி. மலை சிகரத்தில் உள்ள, 125 அடி உயர பாறை, சிவலிங்கம் போல் தோற்றமளிக்கிறது. இதை, சிவனின் உக்கிர வடிவமான, பைரவர் என கருதி, 'ஆகாச பைரவா' என, பெயர் சூட்டியுள்ளனர், பக்தர்கள். இந்த மலையில், 200 படிகள் ஏறினால், காலபைரவேஸ்வரர் கோவிலை அடையலாம். ஆனால், படிகளில் ஏறும் போது காலணி அணிய கூடாது. படிகளில் மேற்கூரை உள்ளதால், மழை, வெயிலில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.

கோவிலைத் தாண்டி, ஆகாச பைரவர் சிகரத்துக்கு செல்பவர்கள், இரும்பு சங்கிலிகளை பிடித்தபடி ஏற வேண்டும். ஆங்காங்கே வழுக்கலான பாறைகளும் உண்டு. இங்கு முதியவர்கள் மற்றும் இதய நோயாளிகள் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இந்த மலையில் ஆயிரக்கணக்கான மயில்கள் உள்ளன. இதனால், இதை மயூர வனம் என்கின்றனர். மலை உச்சியில், பிந்துசரோவர் என்ற குளம் உள்ளது.

இந்தக்கோவிலில் மூலவராக, கங்காதரேஸ்வரர் உள்ளார். ஆனால், பிரதான தெய்வமாக, பைரவேஸ்வரர் போற்றப்படுகிறார். இவரை தங்கள் காவல் தெய்வமாக போற்றுகின்றனர், பக்தர்கள். இந்தக் கோவில், இரண்டாயிரம் ஆண்டு பழமையானது. கோவில் வரலாறு பற்றி சில செவி வழி செய்திகள் உள்ளன...

சீதையைத் தேடி, ராம லட்சுமணர் காட்டில் சுற்றிய போது, கஞ்சனகட்டே என்ற இடத்தில் தவம் செய்து கொண்டிருந்த ஒரு சிவயோகியை கண்டனர். சிவபெருமான், யோகியின் வடிவில் அங்கு தவமிருப்பதைப் புரிந்து கொண்டனர். ராம, லட்சுணரை ஆசிர்வதித்த, யோகி, தன் இடத்தில் தங்கும்படி அவர்களிடம் சொல்லி, சுஞ்சனகிரி மலைக்கு தவமிருக்க சென்று விட்டார்.

அங்கு, சுஞ்சா, கஞ்சார் என்ற கொடியவர்கள் மக்களை துன்புறுத்தியதைக் கண்டு கோபமடைந்த, சிவன், அவர்களுடன் போரிட்டார். மரணத்தருவாயில், சுஞ்சா, தன் பாவத்துக்கு மன்னிப்பு வேண்டியும், தன் பெயரில் அங்குள்ள மலை விளங்க வேண்டும் என்றும், அந்த மலையில் தங்கி பக்தர்களுக்கு அருள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். இதனால், அந்த மலை, சுஞ்சனகிரி என, பெயர் பெற்றது.

பெங்களூரு-மங்களூரு சாலையில், பெல்லுருகிராஸ் என்ற இடம்வரை சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில், 13 கி.மீ., சென்றால், ஆதிசுஞ்சனகிரியை அடையலாம். பெல்லுருகிராஸ் வரை பஸ்களும் உண்டு. இக்கோவில், மாண்டியா மாவட்டம், நாகமங்கலா தாலுகாவில் உள்ளது.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us