விசேஷம் இது வித்தியாசம்: இரண்டு தாய்க்கு ஒரு மகன்!
விசேஷம் இது வித்தியாசம்: இரண்டு தாய்க்கு ஒரு மகன்!
PUBLISHED ON : ஆக 30, 2026

செப்., 4 - கிருஷ்ண ஜெயந்தி
எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும் என்பர். ஆனால், குழந்தையை பெற்ற அன்றே தாய் பிரிய வேண்டிய நிர்பந்தம், கிருஷ்ணரை பெற்ற தாய், தேவகிக்கு ஏற்பட்டது.
அவள் என்ன சாதாரணமானவளா! தேவகர் என்ற அரசரின் மகள். போஜவம்ச அரச குமாரன், கம்சனின் ஒன்று விட்ட தங்கை. அவளை, மதுராவை ஆட்சி செய்த, சூரசேனன் என்ற மன்னனின் மகன், வசுதேவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவளுக்கு சீர்வரிசையாக, 400 யானைகள், 15 ஆயிரம் குதிரைகள், 18 ஆயிரம் தேர்கள் தரப்பட்டன. 200 பணிப்பெண்களும் அனுப்பப்பட்டனர். அப்படியானால், அவள் எவ்வளவு பெரிய செல்வ சீமாட்டி என, சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால், இவற்றை அனுபவிக்க அவளுக்கோ, அவள் பெற்ற பிள்ளைக்கோ கொடுத்து வைக்கவில்லை.
முற்பிறப்பில், பிரிஷ்னி என்ற பெயரில் பிறந்திருந்தாள், தேவகி. அவளது கணவர், சுதபா முனிவர். இருவரும், விஷ்ணு பக்தர்கள். பெருமாளே தங்களுக்கு பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என, வேண்டியவர்கள். அவர்களது வேண்டுதலை ஏற்று, மறுபிறப்பில் இருவரையும் ராஜகுலத்தில் பிறக்கச் செய்தார். அவர்களுக்கு மகனாக பிறந்தார், கிருஷ்ணர்.
ஆக, கொடுத்த வாக்கின்படி, தேவகியின் விருப்பத்தை நிறைவேற்றி விட்டார், விஷ்ணு. ஆனால், இருவரும் சேர்ந்து வாழ முடியவில்லை. கிருஷ்ணரின் குழந்தைக்கால குறும்புகளை ரசித்தாள், வளர்ப்புத் தாயான யசோதை.
யார் இந்த யசோதை?
இயற்கை சக்திகளை ஒழுங்குபடுத்தும், அஷ்டவசுக்களில் ஒருவரது பெயர், துரோணர். இவரது மனைவி, தாரா. இருவரும், விஷ்ணு பக்தர்கள். விஷ்ணுவே, தங்களுக்கு பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என, வேண்டி வந்தனர். அவர்கள் முன் தோன்றிய, விஷ்ணு, 'முன்னதாகவே பிரிஷ்னி என்ற பக்தையின் வயிற்றில் பிறப்பதாக வாக்களித்து விட்டேன். எனவே, மறுபிறப்பில் என்னை வளர்க்கும் பாக்கியத்தை உங்களுக்கு தருவேன்...' என்றார். அதன்படி, துரோணரும், தாராவும், நந்தகோபர்--யசோதை என்ற பெயரில் பிறந்து, கிருஷ்ணரை வளர்க்கும் பாக்கியம் பெற்றனர்.
இதிலிருந்து ஒரு அழகான செய்தியை உலகுக்கு அறிவிக்கிறார், கிருஷ்ணர். பெற்றால் தான் பிள்ளை என்று இல்லை. உலகில் பிறக்கும் எல்லா குழந்தைகளையும், தம் குழந்தைகளாக கருதி, அவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதே அந்த செய்தி.
மற்றொரு நீதியும் இந்த நிகழ்வின் மூலம் நமக்கு புரிகிறது. தேவகிக்கு ஏராளமான நகைகள், சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. தாய் வீட்டு சீதனமான அதை அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை, கிருஷ்ணருக்கு. சின்னஞ்சிறு கிராமத்தில், பசுக்களை மேய்க்கும் சிறுவனாக வளர்ந்தார். செல்வம் நிலையற்றது என்பதை தன் பிறப்பின் மூலம் உணர்த்தினார்.
இந்த நீதிகளையெல்லாம் மனதில் பதித்து, எளிய வாழ்வு வாழ, அவரது பிறந்தநாளில் உறுதியெடுப்போம்.
தி. செல்லப்பா
