தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: வருகிறார் பாவநாசன்!

விசேஷம் இது வித்தியாசம்: வருகிறார் பாவநாசன்!

விசேஷம் இது வித்தியாசம்: வருகிறார் பாவநாசன்!


PUBLISHED ON : செப் 06, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப் ., 12 - கல்கி ஜெயந்தி

உலகில் எப்போதெல்லாம் ஆட்சியாளர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்களாக மாறுகின்றனரோ, அநியாயங்கள் கட்டு மீறிப் போகிறதோ, பெண்களுக்கும், வலு இல்லாதவர்களுக்கும் துன்பம் இழைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம், பூமியில் அவதாரம் எடுத்திருக்கிறார், பகவான் விஷ்ணு.

எல்லா யுகங்களிலும் பகவான் அவதாரம் எடுத்தாலும், கலியுகத்தில் அவர் எடுக்கப் போகும் அவதாரத்தின் விளைவை ஆட்சியாளர்கள் கடுமையாகவே சந்திப்பர்; இந்த அவதாரத்தின் பெயர் தான், கல்கி.

'கல்கா' என்ற மூலச் சொல்லில் இருந்து பிறந்தது, கல்கி. கல்கா என்றால், அசுத்தம் அல்லது பாவம். பாவ அசுத்தத்தை துடைத்து, சுத்தமான புதிய உலகை படைக்க வருபவரின் பெயர், 'கல்கின்!' இதற்கு, 'பாவநாசன்' என்று பொருள். பாவங்கள் அனைத்தையும் துடைத்து எறிவதுடன், முதல் யுகமான சத்திய யுகத்தையும் படைத்துச் செல்வார், கல்கி.

சத்திய யுகம் பிறந்து விட்டால், உலகில் மக்களுக்கு துன்பமே கிடையாது. மரணமில்லா வாழ்வு, நல்லாட்சி, போரில்லா நிலை என, பல நன்மைகள் மக்களுக்கு கிடைக்கும்.

இவர், உத்தரபிரதேச மாநிலம், ஷம்பலா கிராமத்தில் பிறக்க இருக்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது. புதுடில்லியில் இருந்து 140 கி.மீ., உ.பி., தலைநகர் லக்னோவில் இருந்து 355 கி.மீ., துாரத்தில் இவ்வூர் உள்ளது. ஷம்பலா நகரில் இருந்து 20 கி.மீ., துாரத்திலுள்ள, அய்ஞ்சோரா என்ற இடத்தில், கல்கிக்கு இப்போதே கோவில் கட்டப்படுகிறது, 'கல்கி தாம்' எனப்படும் இந்தக் கோவில். இதே இடத்தில் ஏற்கனவே இருந்த கோவில் பிரிதிவிராஜனால் கட்டப்பட்டது. காலப்போக்கில் அது அழிந்து விட, புதிய கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகின்றன.

கல்கி பகவான், விஷ்ணுயாஸ்கஸ்- - சுமதி என்ற தம்பதிக்கு பிறக்க இருப்பதாகவும், இவருக்கு பத்மாவதி, ரமா என்ற வைஷ்ணவிதேவி என்ற துணைவியர் இருப்பர் என்றும் நம்பப்படுகிறது. அதாவது, ஸ்ரீதேவியும், பூதேவியும் இந்தப் பெயர்களில் பிறப்பர். தேவதத்தா என்ற வெள்ளைக் குதிரையின் மீது, வாளுடன் பவனி வருவார், கல்கி. இவருக்கு, ஜெயன், விஜயன், மேகமாலா, பாலககா ஆகிய குழந்தைகள் இருப்பர்.

ஆவணி மாதம், வளர்பிறை துவாதசி திதியன்று, கல்கி பிறப்பார் என்ற நம்பிக்கை உள்ளதால், இந்த நாளில், கல்கி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கல்கியின் வாகனம் குதிரை என்றாலும், தென்மாநிலங்களில் ஏற்கனவே குதிரை முகம் கொண்ட, ஹயக்ரீவரை வணங்கும் வழக்கம் இருக்கிறது. இவர், கல்வி தரும் தெய்வமாக கருதப்படுகிறார். ஹயம் என்றால், குதிரை. க்ரீவம் என்றால், முகம்.

கலியுகத்தில் இப்போதே அநியாயங்கள் பெருகி விட்டன. உலகைக் காக்க யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அது, விரைவில் நிறைவேற, பகவான் விஷ்ணுவை உளமாரப் பிரார்த்திப்போம்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us