தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: விநாயகர் வடிவ கோவில்!

விசேஷம் இது வித்தியாசம்: விநாயகர் வடிவ கோவில்!

விசேஷம் இது வித்தியாசம்: விநாயகர் வடிவ கோவில்!


PUBLISHED ON : செப் 13, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 13, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்., 14 விநாயகர் சதுர்த்தி

விநாயகர் கோவில்களை பார்த்திருப்போம். ஆனால், விநாயகர் வடிவத்தையே, கோவிலாக கட்டியுள்ளதை பார்த்திருக்கிறீர்களா? இந்த அதிசய கோவில், குஜராத் மாநிலம், மெஹ்மதாபாத்தில் உள்ளது. ஆசியாவிலேயே, இத்தகைய கோவில் இது மட்டுமே. இந்தக் கோவில், 71 அடி உயரம் கொண்டது.

மெஹ்மதாபாத்தில் வசித்தவர்கள், மெகன்லால்--புரோகித்-தாஹிபா தம்பதியர். இவர்களது குடும்பம், விநாயகர் மீது மிகவும் பக்தி கொண்டது. இவர்களுக்கு, நரேந்திரபாய் என்ற மகன் பிறந்தார். மூன்று மாத கைக்குழந்தையாக இருந்த போதே, இவரது தந்தை, மெகன்லால் இறந்து விட்டார். தாஹிபா குழந்தையை கஷ்டப்பட்டு வளர்த்தார். இருப்பினும், அவருக்கு ஒரு விநாயகர் கோவில் கட்ட வேண்டும் என்ற கனவு இருந்தது. இதுபற்றி, தன் மகனிடம் குழந்தை பருவத்தில் இருந்தே சொல்லிச் சொல்லி வளர்த்தார்.

குழந்தை வளர வளர, விநாயகர் மீதான பக்தியும் வளர்ந்தது. ஆனால், கோவில் கட்டுமளவுக்கு அவர்களிடம் பண வசதி இல்லை.

இந்த சமயத்தில், தாஹிபாவும் இறந்து விட, நரேந்திரபாயின் உள்ளத்தில் கோவில் கட்டும் உணர்வு கொழுந்து விட்டு எரிந்தது.

ஒருநாள், அவர் ஒரு கனவு கண்டார்... 'வெள்ளை உருவம், ருத்ராட்ச மரம், ஆற்றங்கரை இவற்றை ஒரு சேர எங்கு பார்க்கிறாயோ, அங்கு எனக்கு கோவில் எழுப்பு...' என்று கனவில் சொன்னார், விநாயகர். அப்படி ஒரு இடத்தை பல ஆண்டுகளாகத் தேடி அலைந்தார், நரேந்திர பாய். பல சாதுக்களை சந்தித்து, அவர்களின் வழிகாட்டுதலின்படி, கனவில் கண்ட இடத்தை பார்த்தார். மிகுந்த சிரமப்பட்டு விலைக்கு வாங்கினார்.

அங்கே, பலரது உதவியுடன், விநாயகரின் வடிவத்தில் கோவில் எழுப்பினார். கோவிலின் நீளம், 121 அடி. அகலம், 84 அடி. உயரம், 71 அடி. இதில், 8 அடி உயரமுள்ள விமானம் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், பெரோ சிமென்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கோவில் எழுந்தது. துாரத்தில் இருக்கும் போது, கோவிலின் வடிவம் விநாயகர் போல காட்சி தந்தது. இந்தக் கோவில் உள்ளே, விநாயகருக்கு மூலஸ்தானம் கட்டப்பட்டது.

ஆசிய சாதனை மற்றும் இந்திய சாதனை புத்தகங்களில், இது ஒரு சிறப்பம்சம் மிக்க கோவில் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. 2011ல், கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 2014ல், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலுக்குள் இருக்கும் படிக்கட்டுகளில் ஏற சிரமப்படும் முதியவர்களுக்கு, 'லிப்ட், பேட்டரி கார்' வசதி செய்யப்பட்டுள்ளது. கோவிலை ஒட்டி, உணவு விடுதி, வாகன நிறுத்துமிடம், ஹெலிபேட் வசதி இருக்கிறது. குழந்தைகள் விளையாட பூங்கா, பக்தர்கள் தங்கும் அறைகளும் உள்ளன. தினமும், 10 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர்.

அகமதாபாத்தில் இருந்து, 33 கி.மீ., விமான நிலையத்தில் இருந்து, 28 கி.மீ., துாரத்தில் மெஹ்மதாபாத், சித்தி விநாயகர் கோவில் உள்ளது. ஆசியாவின் அதிசய கோவில்களில் ஒன்றான இதை தரிசித்து வருவோமே!

- தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us