விசேஷம் இது வித்தியாசம்: ஒரே இடத்தில், 300 சப்பர தரிசனம்!
விசேஷம் இது வித்தியாசம்: ஒரே இடத்தில், 300 சப்பர தரிசனம்!
PUBLISHED ON : அக் 04, 2026

விஜயதசமி முடிந்த பிறகும், தசரா திருவிழாவை ஒரு வாரம் கொண்டாடும் பக்தர்கள் இமாசல பிரதேசத்தில் உள்ளனர். இங்குள்ள, குலு என்ற ஊரில், இந்த விழா நடக்கிறது. நவராத்திரி தொடங்கும் இச்சமயத்தில், இது பற்றிய வித்தியாசமான தகவலைத் தெரிந்து கொள்வோமா?
குலுவிலுள்ள தால்பூர் மைதானத்தில் நடக்கும், குலு தசரா விழாவில், சுற்றுப்புற கிராமங்களிலுள்ள கோவில்களில் இருந்து, 300 சப்பரங்கள் வந்து குவியும்.
சப்பரம் என்பது கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது, சுவாமி விக்ரகங்களை வீதி உலா அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் சிறிய வடிவிலான வாகனம்.
இங்குள்ள தலைமை சுவாமியான, ரகுநாத சுவாமிக்கு மரியாதை செய்யும் விதத்தில், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இவ்வாண்டு, அக்., 20 -- 26 வரை விழா நடைபெறும்.
ராமரை, இங்கு ரகுநாத் என்று அழைக்கின்றனர். 'ரகுநாத் மந்திர்' என்ற பெயரில், ராமருக்கு இங்கு கோவில் உள்ளது.
இந்த விழா நடைபெற காரணம் இதுதான்...
கடந்த, 17ம் நுாற்றாண்டில் இந்த பகுதியை ஆட்சி செய்தவர், ராஜா ஜகத்சிங். இவர் மீது மக்களுக்கு மரியாதையும், பயமும் அதிகம். அவரது தேசத்தில், துர்காதத்தா என்பவர் வசித்தார். அவரிடம் விலை மதிப்புமிக்க முத்துக்கள் இருப்பதாக யாரோ புரளி கிளப்பி விட்டனர். அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என, உத்தரவிட்டார், ராஜா. உண்மையில், தத்தாவிடம் அதுபோன்ற முத்துக்கள் ஏதும் இல்லை.
'தன்னிடம் முத்துக்கள் இல்லை...' என, மறுத்தார், துர்காதத்தா. இதை நம்பாத ராஜா, அவரைக் கொடுமை செய்தார். அதைத் தாங்காத தத்தா, தன் உடலில் தீ வைத்து கொண்டார். சாகும் தருவாயில், 'என்னைக் கொடுமை செய்த உன்னால் இனி, சாப்பிட முடியாது. சாப்பாடு புழுவாகவும், தண்ணீர் ரத்தமாகவும் மாறி விடும்...' என, சாபமிட்டு, இறந்து விட்டார்.
இதைக்கேட்டு, நொந்து போனார், ராஜா. அப்பகுதியில் வசித்த, புஹான் பாபா என்ற துறவியிடம், பாவம் தீர ஆலோசனை கேட்டார், ராஜா. அவர், தன் ஆன்மிக சக்தி மூலம் அவரது பாவங்களை நீக்கியதுடன், நரசிம்மர் விக்ரகம் ஒன்றையும் கொடுத்தார். அதை சிம்மாசனத்தில் வைத்து, தான் ஒரு பிரதிநிதியாக இருந்து மட்டும் ஆட்சி செய்தார், ராஜா. மேலும், அயோத்தியில் இருந்த கட்டை விரல் அளவே உள்ள, சீதா - ராமர் விக்ரகங்களை எடுத்து வந்து, கோவில் கட்ட அறிவுறுத்தினார், புஹான் பாபா. ராஜாவும் அவ்வாறே கோவில் கட்டினார். அக்கோவிலுக்கு, ரகுநாத் மந்திர் என, பெயரிடப்பட்டது. குலு பிரதேசத்தின் முதன்மை தெய்வமாக, ரகுநாத் அறிவிக்கப்பட்டார்.
அன்று முதல் விஜயதசமிக்கு மறுநாள் சுற்றுப்புற கிராம கோவில்களில் இருந்து, 300 சப்பரங்களில், அந்தந்த கோவில் விக்ரகங்கள் பவனி வந்து, ரகுநாத சுவாமிக்கு மரியாதை செய்யும், குலு தசரா விழா தொடங்கியது. இதைக் காண, ஒவ்வொரு ஆண்டும், 5 லட்சம் பக்தர்கள் வருகின்றனர்.
சிம்லாவில் இருந்து 200 கி.மீ., துாரத்தில், குலு உள்ளது. டில்லியில் இருந்து பூந்தர் விமான நிலையம் சென்று, 10 கி.மீ., துாரத்திலுள்ள குலுவை அடையலாம். குலுவில் இருந்து, 40 கி.மீ., துாரத்தில் புகழ் பெற்ற மணாலி (குலு-மணாலி) சுற்றுலா தலம் உள்ளது.
- தி. செல்லப்பா
