PUBLISHED ON : நவ 18, 2026

நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவதற்கு ரகத்தேர்வு, தரமான விதை, விதை நேர்த்தி, பயிர் இடைவெளி, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, களை, பூச்சி, நோய் மேலாண்மை செய்ய வேண்டும்.
மானாவாரியில் ஆடி, புரட்டாசி பட்டங்களும் இறவைப் பாசனத்திற்கு தை, சித்திரை பட்டங்களும் ஏற்றது. ரகத்தைத் தேர்வு செய்யும்போது மாவட்டம், பருவம், மானாவாரி, இறவை, பயிரின் கால அளவு, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றை கவனிக்க வேண்டும்.
நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது மண்ணை பொலபொலப்பாக்கி நீர் தேங்காமல் வடிகால் வசதி செய்ய வேண்டும். மானாவாரியில் மழைநீரைச் சேமிக்கும் வகையில் நிலச்சரிவு, மண் வகைக்கு ஏற்றவாறு பாத்திகள், வரப்புகள் அமைக்க வேண்டும். கொத்து ரகங்கள் என்றால் எக்டேருக்கு 100 முதல் 125 கிலோ, விரியும் ரகங்களுக்கு 80 முதல் 100 கிலோ விதைகள் தேவைப்படும். வரிசை இடைவெளி 30 செ.மீ., செடி இடைவெளி 10 செ.மீ., அளவுடன் 4 முதல் 5 செ.மீ., ஆழத்தில் விதைக்க வேண்டும்.
விதைகளை பூஞ்சைக் கொல்லி அல்லது உயிரியல் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ரசாயனப் பூஞ்சைக் கொல்லி நேர்த்தி செய்த விதைகளில் உயிர் உரங்களை உடனடியாகக் கலக்கக்கூடாமல் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
உரப்பரிந்துரைப்படி மானாவாரி, இறவைக்கு மண் வளம், ரகத்தைப்பொறுத்து எக்டேருக்கு 10 முதல் 12.5 கிலோ தழைச்சத்து, 20 - 25 கிலோ மணிச்சத்து, 20 - 25 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். பூக்கும், ஆணி வேர் உருவாகும் பருவத்தில் ஜிப்சத்தை செடிகளின் அடிப்பகுதியில் இடும் போது லேசாக மண் அணைக்க வேண்டும்.
களை மேலாண்மை:
விதைத்த 20 முதல் 25 நாட்களில் முதல் களையெடுப்பு, தேவைக்கேற்ப 35 முதல் 40 நாட்களில் இரண்டாவது களையெடுப்பு எடுக்க வேண்டும். பூக்கும், ஆணி வேர் உருவாகும் பருவத்திற்குப் பிறகு ஆழமாகக் களையெடுக்கக்கூடாது. விதை முளைப்பு, பூக்கும் பருவம், ஆணி வேர் உருவாகும் பருவம், காய் உருவாகும், பருப்பு நிரம்பும் பருவங்களில் மண்ணில் போதிய ஈரப்பதம் இருக்க வேண்டும்.
பூச்சி மேலாண்மை செய்வதற்கு முதல் படி வயலை சுத்தமாக பராமரிப்பது தான். இயற்கை எதிரி ஒட்டுண்ணி, பூச்சிகளை பாதுகாத்தால் நிலக்கடலை இலை, பூ, காய்களை சேதப்படுத்தும் புழு, பூச்சிகளை அவை அழித்துவிடும். ரகத்தின் வயது, பருவத்தைப் பொறுத்து 100 முதல்120 நாட்களில் அறுவடை செய்யலாம்.
-அருண்ராஜ், தொழில்நுட்ப வல்லுநர், சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம்,காமாட்சிபுரம், தேனி.
