PUBLISHED ON : அக் 14, 2026

ராசாயன உரங்களின் தொடர்ச்சியான பயன்பாட்டால் மண்வளம் பாதிப்புக்குள்ளாகிறது. இதனைத் தவிர்க்க உயிர் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.
திரவ உயிர் உரங்களை பயன்படுத்தும் போது வேர்கள், வேர் முடிச்சுகளின் மூலம் வளி மண்டலத்திலுள்ள நைட்ரஜனை நிலைநிறுத்தி பயிர்களுக்கு அளிக்கிறது. மண்ணில் கட்டுண்டு கிடக்கும் மணிச்சத்து, சாம்பல் சத்துக்களை விடுவித்து பயிர்கள் கிரகித்துக்கொள்ளும் வடிவில் மாற்றுகின்றன. இதன் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டை 25 முதல் 30 சதவீதம் குறைத்து, நிகர சாகுபடி செலவை குறைத்து லாபம் பெறலாம்.
பயன்படுத்தும் முறை:
ஒரு எக்டேருக்குத் தேவையான விதையுடன் பயிருக்கேற்ற உயிர் உரத்தினை விதைநேர்த்தி செய்ய வேண்டும். 250 மில்லி உயிர் உரத்தை விதையுடன் கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும். விதைகளை உயிர் பூஞ்சைக் கொல்லியுடன் விதைநேர்த்தி செய்த பின், கடைசியாக உயிர் உரத்தை கலந்து விதைநேர்த்தி செய்யவேண்டும். நாற்றுகளாக இருந்தால் 250 மில்லி உயிர் உரத்தில் நாற்றுகளின் வேர்களை 30 நிமிடங்கள் நனைய வைத்து நடவு செய்ய வேண்டும். நேரடியாக வயலில் இட வேண்டுமெனில் 50 கிலோ மட்கிய தொழுஉரத்துடன் 500 மில்லி உயிர் உரம் கலந்து இட்டு நடவுசெய்ய வேண்டும். தோட்டக்கால், மானாவாரி பயிர்களுக்கு மண்ணில் நல்ல ஈரம் இருக்கும் போது விதைப்பதற்கு முன்பு அல்லது முதல் களை எடுத்தபின் இடவேண்டும்.
ஓராண்டுக்கு மேல் வளர்க்கப்படும் பயிர்கள், பூக்கள், மரப்பயிர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை வேர்ப்பகுதியில், மட்கிய தொழு உரத்துடன் உயிர் உரம் கலந்து செடியில் இருந்து ஒன்று முதல் 3 அடி தள்ளி இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திரவ உயிர் உரம் உற்பத்தி மையத்தில் அசோஸ்பைரில்லம், அசோபாஸ், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, ஜிங்க் பாக்டீரியா உயிர் உரங்கள் நெல்லுக்கு தனியாகவும் பிற பயிர்களுக்கு தனியாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 55ஆயிரம் லிட்டர் வீதம் அரைலிட்டர் பாட்டில்களில் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் குறிப்பிட்ட திரவ உயிர் உற்பத்தி மையங்களின் மூலம் இரண்டு அல்லது மூன்று மாவட்ட விவசாயிகளுக்கு இவை மானிய விலையில் வழங்கப்படுகிறது. நேரடியாக விவசாயிகளுக்கு விற்கப்படுவதில்லை.
அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் ஒன்பது வகையான திரவ உயிர் உரங்கள் கிடைக்கிறது. உயிர் உரங்களை பயன்படுத்தும் போது ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளுடன் கலக்கக்கூடாது. மீதமுள்ள உயிர் உரங்களை குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாக்க வேண்டும்.
– ராணி, வேளாண்மை இணை இயக்குநர், வேளாண் துறை, மதுரை.
