PUBLISHED ON : நவ 18, 2026

தமிழகத்தில் உள்ள நிலங்களில் 65 சதவீதம் செம்மண்ணாகவும் 12 சதவீதம் கரிசல் மண், 3 சதவீதம் செம்பொறை மண், 7 சதவீதம் கடற்கரை மண் காணப்படுகிறது.
தெற்கு மண்டலமான மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் கடலோர வண்டல் மண், கரிசல் மண், ஆழமான செம்மண், மணற்பாங்கான செம்மண் காணப்படுகிறது.
வளமான மண் என்றால் செடியின் வளர்ச்சிக்கு தேவைப்படும் அடிப்படை சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்கள் கிடைக்க வேண்டும். போரான், கினோசின், கோபால்ட், செம்பு, இரும்புச்சத்து, மாங்கனிஸ், மெக்னிசியம், மாலிப்டினம், கந்தகம், துத்தநாக தாதுக்கள் போதுமான அளவில் கிடைக்க வேண்டும். ஆழமான மண் அமைப்பு, வடிகால் வசதியுடன் கூடிய மண்ணின் கார, அமிலத் தன்மை 6.0 முதல் 6.8 வரை இருக்க வேண்டும். வளமான மண்ணில் அங்ககப் பொருள் இருப்பதால் மண்ணின் அமைப்பு மேம்படுவதுடன் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு மண் பரிசோதனை அவசியம். பயிர் அறுவடைக்குப் பின் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும். எனவே மண் பரிசோதனை செய்து மண் வளம் அறிய வேண்டும். மண் அரிப்பு, சத்துக்கள் ஆவியாதலால் மண்வளம் குன்றிவிடும்.
பயிரின் தேவை, மண்ணின் தன்மை, உர உபயோகத் திறனை கருத்தில் கொண்டு உர நிர்வாகம் செய்ய வேண்டும். சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி பயிரின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
மண்மாதிரி எடுக்கும் முறை:
நிலம் தரிசாக இருக்கும் போது மண் மாதிரி எடுக்க வேண்டும். நிறம், பயிர்ச் சுழற்சிக்கு ஏற்றாற்போல பல பகுதிகளாகப் பிரித்து நிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் தனித்தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல், கிணற்கு பகுதிகளிலும் குப்பை உரம், பூஞ்சாணம் மற்றும் பூச்சி மருந்து இட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக் கூடாது.
மாதிரி எடுக்கும் பொழுது ஆங்கில 'வி' எழுத்து வடிவத்தில் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை அகற்றி 15 செ.மீ., அல்லது 23 செ.மீ., ஆழம் அளவிற்கு ஒரு எக்டேரில் 10 முதல் 20 இடங்களில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்த வேண்டும்.
நுண்ணுாட்டம் அறிவதற்கு மண்வெட்டி, இரும்பு சட்டிகளை பயன்படுத்தக் கூடாது. எவர்சில்வர் அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் சேகரிக்கலாம். மண் பரிசோதனை நடைமுறைக்கு ஏற்றவாறு அவற்றை சுருக்கி அனுப்ப வேண்டும்.
மண் வளத்தை நிலைநிறுத்துவதன் மூலம் பயிரின் உற்பத்தி, லாபத்தை மேம்படுத்தலாம்.
