/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மக்காச்சோளம், பருத்தி விதைகள் தரமானதா
/
மக்காச்சோளம், பருத்தி விதைகள் தரமானதா
PUBLISHED ON : அக் 22, 2025

தமிழகத்தில் மானாவாரியில் மக்காச்சோளம், பருத்தி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அதிக மகசூல் பெறுவதற்காக பெரும்பாலும் தனியார் நிறுவனங்களின் வீரிய ஒட்டுரக மக்காச்சோளம், பருத்தி விதைகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
சரிபார்க்க வேண்டும் ஆனால் விதைப்பைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விதைத்தர விபரத்தில் விதை சுத்தத்தன்மை, முளைப்புத்திறனை சரிபார்ப்பது அவசியம். மக்காச்சோளப் பயிருக்கு குறைந்தபட்சம் 90 சதவீதம், வீரிய பருத்திக்கு 75 சதவீதம், ரகப்பருத்திக்கு 65 சதவீத விதை முளைப்புத்திறன் இருக்க வேண்டும்.
பருவமழை துவங்கியுள்ளதால் மக்காச்சோளம், பயிர் செய்யும் விவசாயிகள் விதை முளைப்புத்திறனை பரிசோதனை செய்ய வேண்டும். மாவட்ட விதைப்பரிசோதனை நிலையங்களில் விதையின் தரம், முளைப்புத்திறனை ரூ.80 கட்டணத்தில் கண்டறியலாம்.
தொழில்நுட்பம் பின்பற்றணும் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலையும், பருத்தியில் தண்டு கூண்வண்டு தாக்குதலையும் கட்டுப்படுத்துவதற்காக, கடைசி உழவின்போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு நடவு செய்தால் ஆரம்பகட்ட பூச்சித் தாக்குதலை தவிர்க்கலாம்.
மக்காச்சோள விதைகளை இயற்கை முறையில் விதைநேர்த்தி செய்யலாம். 80 கிராம் சூடோமோனஸ் ப்ளுரசன்ஸ் பொடியை 100 மில்லி தண்ணீரில் கலந்து அந்த கரைசலில் விதைகளை 12 மணி நேரம் ஊற வைத்து விதைத்தால் பூச்சி, நோய்த் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கலாம்.
பருத்தியில் பஞ்சுநீக்கம் பருத்தி விதைகளை அமில முறையில் பஞ்சு நீக்கம் செய்து பயன்படுத்தலாம். ஒரு கிலோ விதையினை உலர்ந்த பிளாஸ்டிக் வாளியில் கொட்டி அதில் 100 மில்லி அடர் கந்தக அமிலத்தை சீராக ஊற்றி 3 நிமிடம் வரை குச்சியால் ஒரே திசையில் கலக்கும் போது பருத்தியின் மேல் உள்ள பஞ்சு நீங்கும்.
விதை காப்பிகொட்டை நிறத்திற்கு வந்த பின்னர் அவற்றை 5 முறை தண்ணீரில் கழுவ வேண்டும். தண்ணீரில் மிதக்கும் பொக்கு விதை, பூச்சி தாக்குதலுக்கு உண்டான விதை, மிகச் சிறிய விதை, முற்றாத விதைகளை அகற்ற வேண்டும். முற்றிய விதைகளை நிழலில் உலர்த்தி பின்பு வெயிலில் உலர்த்தி பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு பிரித்தெடுத்த ஒரு கிலோ அளவு விதைக்கு தலா 10 கிராம் அளவு பிவேரியா பேசியானா, பேசில்லஸ் சப்டிலிஸ் மற்றும் டிரைகோடெர்மா அஸ்பெரில்லம் ஆகிய உயிர் மருந்துகளை கலந்து விதைப்பதன் மூலம் சாறு உறிஞ்சும் பூச்சிகள், மண் மூலம் பரவும் நோய்களிலிருந்து பயிர்களை பாதுகாக்கலாம். விதைகளின் முளைப்புத்திறனையும் அதிகரிக்கலாம்.
-சிவகாமி விதைப்பரிசோதனை அலுவலர் ஜானகி சாய்லட்சுமி சரண்யா வேளாண் அலுவலர்கள் விதைப்பரிசோதனை அலுவலகம், விருதுநகர்