PUBLISHED ON : நவ 05, 2025

குறைவான நீர்த்தேவையுடன் அதிக புரதச்சத்து நிறைந்த உளுந்து பயிர், பொருளாதார முக்கியத்துவம் கொண்டது என்பதால் சாகுபடியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உளுந்து, பச்சை பயறு வளர்ச்சி காலம் 60 முதல் 90 நாட்கள். இதை ஆடிப்பட்டம் (ஜூன், ஜூலை), புரட்டாசிபட்டத்தில் (செப்., அக்.,) பயிரிடலாம். உளுந்து பயிரில் 65 முதல் 75 நாட்கள் வயதுடைய வம்பன் 8, 11 ரகங்களை பயிரிடலாம். இவை ஒரே நேரத்தில் முதிர்ச்சியாகி அறுவடை செய்யும் பண்புடையது.
மேலும் மஞ்சள் தேம்பல் நோய் எதிர்ப்பு தன்மையும், ஏக்கருக்கு 375 கிலோ முதல் 400 கிலோ மகசூல் தரும். வம்பன் 12 ரகம் 75 முதல் 80 நாட்களில் ஏக்கருக்கு 350 கிலோ மகசூல் தரும். நெல் தரிசில் பயிரிடுவதற்கு வம்பன் 9 ரகம் ஏற்றது.
உழவும் விதைப்பும்
ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும். முதலில் சட்டி கலப்பையால் ஒருமுறை உழுத பின் ஏக்கருக்கு 5 டன் அளவில் தொழுஉரத்தை பரப்ப வேண்டும். பின்னர் கொக்கி கலப்பையால் இருமுறை உழவேண்டும். 30க்கு 10 செ.மீ. இடைவெளியில் 33 செடிகள் இருக்க வேண்டும்.
விதைநேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் 'சூடோமோனஸ் புளோரசன்ஸ்' எடுத்து, விதைப்புக்கு 24 மணி நேரத்திற்கு முன் விதைநேர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு 200 கிராம் 'ரைசோபியம்', 200 கிராம் 'பாஸ்போபாக்டீரியா' உயிர் உரங்களை ஆறிய அரிசி கஞ்சியுடன் விதையை கலந்து 3 முதல் 4 மணி நேரம் நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.
நீர், உர நிர்வாகம்
முதல் உழவு செய்யும்போது ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், அடியுரமாக 60 கிலோ வேப்பம் புண்ணாக்கை இடுவதன் மூலம் வேரழுகல் நோயை தடுக்கலாம். இறவை பாசனம் என்றால், ஏக்கருக்கு 5 கிலோ யூரியா, 45 கிலோ டி.ஏ.பி., 18 கிலோ பொட்டாஷ் உரங்களை பயன்படுத்தலாம். மானாவாரிக்கு ஏக்கருக்கு 2.5 கிலோ யூரியா, 22 கிலோ டி.ஏ.பி, 10 கிலோ பொட்டாஷ் உரம் இடலாம். மேலும் ஏக்கருக்கு 2 கிலோ ஜிங்க் சல்பேட் நுண்ணுாட்டச் சத்து அளிக்க வேண்டும்.
இலைவழி தெளிப்பு
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் 'பயறு வகை ஒண்டரை' ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து பூக்கும் தருணத்தில் தெளிக்கவேண்டும்.
ஒரு ஏக்கருக்கு பல் கலையின் திரவ 'பயறு ஒண்டர்' ஒரு லிட்டருடன் 19 லிட்டர் தண்ணீர், ஒட்டும் பசை கலந்து பூக்கும் பருவத்தில் 'ட்ரோன்' மூலம் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை தெளிக்கலாம்.
'பயறு ஒண்டர்' கிடைக்கவில்லை எனில் பயறு விதைத்த 25 வது, 40 வது நாட்களில் 4 கிலோ டி.ஏ.பி.,யை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து அதை 190 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். 30வது, 45 வது நாட்களில் 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியாவை கரைத்து தெளிக்க வேண்டும்.
களை நிர்வாகம்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் 'பென்டி மெத்தலின்' மருந்தை விதை விதைத்த மூன்றாம் நாளில் தெளிக்க வேண்டும். மீண்டும் 25ம் நாளில் ஒருமுறை களை எடுக்க வேண்டும். பயிர் வளர்ச்சி பருவத்தில் ஊசி இலை களைகள் அதிகம் இருந்தால் ஏக்கருக்கு 400 மில்லி 'இமாஸ்திபயர்' களைக்கொல்லி, அகன்ற இலை களைகள் இருந்தால் 200 மில்லி 'குயிசல்பாப் இதைல்' மருந்தை தெளிக்க வேண்டும். அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி மருந்து என கணக்கிட வேண்டும்.
பூச்சி, நோய் மேலாண்மை
அசுவினி, வெள்ளை ஈ காய்ப்புழு தாக்குதலுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம். ஏக்கருக்கு 6 எண்ணிக்கையில் மஞ்சள் வண்ண ஒட்டு பொறியும், 5 இனக்கவர்ச்சி பொறியும் வைக்க வேண்டும்.
மஞ்சள் தேம்பல் நோய்க்கு 'அசிட்டம்பிரைடு' 20 எஸ்.பி., மருந்தை ஏக்கருக்கு 100 கிராம் தெளிக்க வேண்டும். இலைச்சுருள் நோய்க்கு 200 மில்லி 'டைமிதோயேட்' 30 இ.சி., அல்லது மீதைல்டெமட்டான் 25 இ.சி., கலந்து தெளிக்கலாம்.
வேரழுகலை கட்டுப்படுத்த ஒரு கிலோ 'சூடோமோனாஸ் புளுரோசன்ஸ்' அல்லது 'டிரைக்கோடெர்மா விரிடி' எடுத்து அதை 20 கிலோ மணல் அல்லது மட்கிய தொழு உரத்துடன் சேர்த்து விதைத்த 30வது நாளில் மண்ணில் இட வேண்டும். தேவைப்பட்டால் வேரழுகல் பாதிப்புள்ள இடத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் 'கார்பன்டசிம்' 50 டபிள்யூ.பி., கலந்து ஊற்ற வேண்டும்.
சரவணன், தொழில் நுட்ப வல்லுநர் (உழவியல்)
வேளாண் அறிவியல் மையம்,
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலை,
திண்டுக்கல்

