PUBLISHED ON : செப் 02, 2026

துரியன் பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரக்கன்றுகளை சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், வயலில் துரியன் பழ மரக்கன்று நட்டுள்ளேன்.
ஒட்டு கட்டிய செடிகளாக சாகுபடி செய்யும் போது, ஐந்து ஆண்டுகளுக்கு பின் மகசூல் கொடுக்க தொடங்கி விடும்.
இந்த துரியன் கன்றுகளுக்கு நல்ல காற்றோட்டம், இடைவெளி மற்றும் தண்ணீர் வடிந்து செல்லும் அளவிற்கு, வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
அப்போது தான் மர சாகுபடிக்கு கன்றுகள் இறக்காமல் இருக்கும்.
குறிப்பாக, துரியன் பழத்தை பொருத்தவரையில், களர் உவர் நிலங்களில் சாகுபடி செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நன்றாக விளைச்சல் தரும் விளை நிலத்தில், மரங்களை சாகுபடி செய்தால், நல்ல மகசூல் ஈட்டுவதோடு, காய்கள் திரட்சியா க வளரும். மலை மண்ணுக்கு வளர்ச்சி அதிகமாக இருக்கும், துரியன் பழத்தில், அதிக மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், கூடுதல் விலை கொடுத்து வாங்கவும், மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.
வீட்டு தேவைக்கு சாகுபடி செய்வதை காட்டிலும், விவசாயிகள் வியாபார நோக்கத்திற்கும் சாகுபடி செய்து நல்ல வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,93846 67714.
