தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/பழ ஈக்களும் கட்டுப்பாட்டு முறைகளும்

பழ ஈக்களும் கட்டுப்பாட்டு முறைகளும்

பழ ஈக்களும் கட்டுப்பாட்டு முறைகளும்


PUBLISHED ON : பிப் 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 04, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழ ஈக்கள் என்பவை பழங்கள், காய்கறிகளைத் தாக்கி அவற்றின் சதையை உண்ணும் சிறிய பூச்சிகள். அவை பழங்களை அழுகச் செய்வதால் விளைச்சலைக் குறைக்கின்றன. பழுப்பு நிற திரவத்தை வெளியேற்றுகின்றன. இவற்றை புறக்கணித்தால் விளைச்சலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மாம்பழ ஈ வயலிலும் அறுவடைக்குப் பின்னரும் பழங்கள், காய்கறிகளில் 20 முதல் 40 சதவீதம் இழப்பிற்கு பழ ஈக்கள் காரணமாகின்றன. சில நேரங்களில் ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்திக்க நேரிடலாம்.

இவற்றை கவர்ச்சிகரமான பொறிகள், இயற்கை முறைகள் அல்லது கிருமிநாசினிகள் மூலம் கட்டுப்படுத்தலாம். பாக்ட்ரோசெரா டோர்சலிஸ் என்பது மாம்பழம் போன்ற பழங்களைத் தாக்கும் ஒரு வகை பழ ஈ. பாக்ட்ரோசெரா குக்குர்பிடே என்பது பூசணி போன்ற கொடி வகை பழங்களைத் தாக்கும் ஒரு இனம்.

தாக்குதலின் அறிகுறிகள்

பழ ஈக்களால் பாதிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகளில் பழுப்பு நிறத்திட்டுகள், துளைகள், அழுகிய திரவம் கசிதல், பழங்கள் உதிர்தல், உட்புற திசுக்கள் பழுப்பு நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். பழத்தின் மேற்பரப்பு மஞ்சள் நிறமாக மாறி சிறிய துளைகளைக் கொண்டிருக்கும். மேலும் புழுக்கள் பழங்களின் சதையைத் தோண்டி அதை விழுங்குவதால் உட்புறம் அழுகி விடும். கடுமையாக இருக்கும்போது காய்கறி, பழங்கள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே உதிர்ந்து விடும். இவற்றை விவசாயிகள் வயலில் பார்த்தால் சிறிய ஈக்கள் தானே என்று அலட்சியப்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வயல் மேலாண்மை

கோடை காலத்தில் பழத்தோட்டத்தில் உள்ள இடைவெளிகளில் உழும் போது சூரியஒளியில் ஈ யின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். பழ ஈக்கள் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளை அடையாளம் கண்டு உணவுப் பொருட்களை அகற்றி கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். மரத்திலிருந்து விழும் பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து 60 செ.மீ., ஆழமுள்ள குழிகளில் புதைக்க வேண்டும்.

துாண்டில் பொறிகள்

மெத்தில் யூஜெனால் பழ ஈ தூண்டில் பொறிகளை நிழலான பகுதிகளில் ஏக்கருக்கு 5 - 10 பொறிகள் என்ற விகிதத்தில் பயன்படுத்தலாம். ஆண் ஈக்களை ஈர்த்து கொல்ல இதுவே சிறந்த வழி. இந்த கலவையை ஒவ்வொரு 15 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். 250 மில்லி கொள்ளளவு கொண்ட அகலமான வாய் கொண்ட பாட்டில்களில் தொங்கும் சாதனங்களுடன் பொருத்தப்பட்ட 100 மில்லி 0.1 சதவீத மெத்தில் யூஜெனால் (1 மில்லி/லிட்டர்), 0.05 சதவீத மாலத்தியான் 50 இ.சி., (1 மில்லி/லிட்டர்) கொண்டு தூண்டில் பொறிகளைப் பயன்படுத்தி ஆண் பூச்சிகளை அழிக்கலாம்.

கருவாடு பொறி

பாலித்தீன் பைகளில் 5 கிராம் கருவாடுடன் 0.1 மில்லி டைகுளோர்வாஸ் வைத்து பைகளில் 6 துளையிட்டு பொறியாக பயன்படுத்தி எக்டேருக்கு 5 வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.

இயற்கை முறை கட்டுப்பாடு

வேப்ப எண்ணெய் 3 சதவீதம் (லிட்டருக்கு 30 மில்லி) தெளிப்பதன் மூலம் பழ ஈக்கள் முட்டையிடுவதைத் தடுக்கலாம். பழங்கள் பழுக்க ஒரு மாதத்திற்கு முன்பு காகிதம் அல்லது பாலித்தீன் பைகளால் மூடுவதன் மூலம் பழ ஈக்களின் தொல்லையைத் தடுக்கலாம்.

ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி மாலத்தியான், 10 கிராம் வெல்லம் கலந்து கரைசலை மரத்தின் அடிப்பகுதியில் தெளித்து ஈக்களை ஈர்க்கலாம். மெத்தில் லுாசின், மாலத்தியானை சமவிகிதத்தில் கலந்து ஒவ்வொரு பாலித்தீன் பையிலும் 10 மில்லி வீதம் ஒரு எக்டேருக்கு 25 இடங்களில் விஷப் பொறியாக வைக்க வேண்டும்.

மற்றொரு விஷ துாண்டிலாக 2 மில்லி டெல்டாமெத்ரின் 0.025 சதவீதம், 100 கிராம் வெல்லத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து மரத்தின் தண்டுகளில் வார இடைவெளியில் தெளிக்கலாம், துாண்டில் அருகிலுள்ள வேலியிலும், தாவரங்களின் மீதும் தெளிக்கலாம். பழங்கள் உருவான 45 நாட்களுக்குப் பிறகு, 15 நாட்கள் இடைவெளியில் டெல்டாமெத்ரின் 0.025 சதவீதம் மூன்று முறை தெளிக்க வேண்டும். பழங்களைப் பறிப்பதற்கு இரண்டு வாரங்கள் வரை 0.03 சதவீத டைமீத்தோயேட்டை தெளிப்பதும் பயன் தரும்.



-அரிபுத்திரன் வேளாண்மை அலுவலர் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் வேளாண் துறை, விருதுநகர்அலைபேசி: 82480 80922

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us