
மண்ணின் தன்மை, தட்பவெப்பநிலை, நோய் தீவிரம் மற்றும் சாகுபடி செய்யப்படும் ரகத்தைப்பொறுத்து வாழை மரங்களில் உண்டாகும் பனாமா அல்லது பூஸாரியா வாடல் நோயால் 40 முதல் 45 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படும். பனாமா வாடல் நோய் 4 மாதத்திற்கு மேற்பட்ட வயதுடைய கன்றுகளை தாக்குகிறது. மீண்டும் மீண்டும் வாழை சாகுபடி செய்தாலும் பூஞ்சாண தாக்குதல் ஏற்படும். வேர்களைத் தாக்கும் போது கிழங்கின் உட் திசுக்களில் நிறமாற்றம் ஏற்படுகிறது. அடுத்ததாக தண்டுப்பகுதியை தாக்கும் போது நோய் தாக்குதலின் அறிகுறி தென்படும்.
உண்ணக்கூடிய தண்டு பகுதியை வெட்டி பார்த்தால் வெளிர் பழுப்பு முதல் வெளிர் சிவப்பு நிற மாற்றத்தை காணலாம். ஆரம்ப நிலையில் இலைக்காம்புகளின் அடிப்பகுதியில் வெளிர் பச்சை முதல் பழுப்பு நிற கோடுகள் காணப்படும். இதனால் ஊட்டச்சத்துக்கள் செடிகளின் மேல் பகுதிகளுக்கு செல்வதில்லை. நிறமாற்றம் அடைந்த அடி இலைகள் பழுப்பு நிறமாகி தண்டுப்பகுதியில் இருந்து இலைகள் பிரியும் இடத்தில் ஒடிந்து தொங்கும்.
தாக்குதல் தீவிரமடையும் போது அடி இலைகளிலிருந்து மேல்புறமாக இலைகள் காய்ந்து தொங்கும். நாளடைவில் வேர், கிழங்குப்பகுதி, தண்டுப்பகுதியில் அழுகல் காணப்படும். கடைசியில் கன்றுகள் இறந்து விடும்.
தடுப்பு முறை
நடுவதற்கு முன்பாக பூஞ்சாணக்கொல்லி நேர்த்தி செய்ய வேண்டும். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பயிர் சுழற்சி செய்ய வேண்டும். கோடையில் வயலை ஆழமாக உழும் போது உறக்க நிலையில் இருக்கும் பூஞ்சாணங்களை அழிக்க முடியும். பனாமா வாடல் நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட பூவன், நேந்திரன், சக்கை, ரோபஸ்டா ரகங்களை நடலாம்.
வாழை கட்டை அல்லது கன்றுகளை டிரைகோடெர்மா அல்லது பேசிலஸ் கொண்டு விதை நேர்த்தி செய்த பின் நடவேண்டும். நடவின் போது குழிக்கு ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். நடவுக்கு முன், அடி உரத்தின் போது மட்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்துடன் ஏக்கருக்கு தலா 3 கிலோ டிரைகோடெர்மா அல்லது பேசில்லஸ் உயிர் பூஞ்சாணக்கொல்லியை தொழு உரத்துடன் ஊட்டமேற்றி இட வேண்டும்.
நடவு செய்த 45 முதல் 60 நாட்களுக்கு ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை அதிகம் இடுவதால் அதன் மூலக்கூறுகள் வேர் வளர்ச்சியை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்புத்தன்மை பெறுகிறது. சுத்தம் செய்த பின் பண்ணைக் கருவிகளை பயன்படுத்த வேண்டும். நான்காம் மாதத்தில் இருந்து 20 நாட்களுக்கு ஒருமுறை, டிரைகோடெர்மா, பேசில்லஸ் கொல்லியை தலா 50 கிராம் எடுத்து பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி செய்தால் நோய் பரவுதல் கட்டுப்படுத்தப்படும்.
-அருள்மணி
உதவி இயக்குநர், தோட்டக்கலைத்துறை
கொட்டாம்பட்டி, மதுரை