PUBLISHED ON : அக் 15, 2025

மானாவாரியில் விவசாயிகளுக்கு கைகொடுப்பது மரவள்ளிக்கிழங்கு பயிர்கள் தான். பழுதில்லாத வருமானத்திற்கு உத்தரவாதம் தருகிறது என்கிறார் பரமத்தி வேலுார் மோகனுாரைச் சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியன்.
பொன்னேரிபட்டி கிராமத்தில் 5 ஏக்கரில் விவசாயம் செய்யும் பாலசுப்ரமணியன், மரவள்ளி சாகுபடி குறித்து விவரித்தார்.
2 ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளேன். மீதி இடத்தில் துவரை சாகுபடி செய்கிறேன். மரவள்ளிக்கிழங்கு எங்கள் பகுதியில் மட்டும் 3000 எக்டேரில் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது. கிழங்கின் தண்டை வெட்டி தான் மறு உற்பத்திக்கு பயன்படுத்துகிறோம். அந்த கணுவிலிருந்து மறுபடியும் பயிர் உற்பத்தியாகும்.
பத்து மாத பயிர் இது. பயிர் அறுவடை செய்தவுடனே அதிகபட்சமாக மூன்று நாட்களுக்குள் அரவை மில்லுக்கு கிழங்கை அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் கிழங்கு அழுகி விடும் அல்லது காய்ந்து விடும். ஒரு காலத்தில் டன்னுக்கு ரூ.6000 வரை கிடைத்தது. தற்போது டன்னுக்கு ரூ.3000 தான் கிடைக்கிறது.
எளிய பராமரிப்பு குச்சியை நட்டபின் களை எடுப்பது தான் வேலை. நட்ட 20வது நாளில் முதல் களை எடுக்க வேண்டும். அதன் பின் பயிர் நிழல் தருவது வரை களையெடுக்க வேண்டும். சில நேரங்களில் தென்னையில் வருவது போன்ற வெள்ளை சுருள் ஈக்களின் தாக்கம் வருவதுண்டு.
சூரிய வெளிச்சம் அதிகமாகும் போது இலைகள் கருகும் வாய்ப்புள்ளது. நட்ட முதல் ஆறு மாதம் வரை பயிரைக் காப்பாற்றுவது முக்கியம். அதன் பின் களை எடுக்க வேண்டியதில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மோகனுாரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இருந்தது. தற்போது கரும்புகளுக்கு மாற்று பயிராக மரவள்ளிக்கிழங்கிற்கு விவசாயிகள் மாறி விட்டனர்.
இதில் ஊடுபயிராக தக்காளி, உளுந்து, வெங்காயம் பயிரிடலாம். நான் ஊடுபயிர் செய்யவில்லை. பத்துமாதம் கழித்து அறுவடைக்கு முதல்நாளில் தண்ணீர் பாய்ச்சினால் செடியை வேருடன் (கிழங்கு) பறிப்பது எளிதாக இருக்கும். ஒரு செடியில் இருந்து அதிகபட்சமாக செடிக்கு 6 முதல் 7 கிலோ கிழங்கு அறுவடை செய்யலாம். மண்ணுக்கு அடியில் உள்ள கிழங்கை வெட்டி எடுத்து மில்லுக்கு அனுப்பி விடும். மேல்பகுதியில் உள்ள செடித்தண்டை தனியாக எடுத்து அதை கரணை போல சேகரித்து மீண்டும் நடுவோம்.
பராமரிப்பு குறைவான மரவள்ளிக்கிழங்கு பயிர், விவசாயிகளுக்கு ஏற்றது. ஏக்கருக்கு ரூ.20ஆயிரம் வரை செலவானாலும் ரூ.ஒரு லட்சம் வரை வருமானம் கிடைக்கும். இவரிடம் பேச: 99435 42214.
-எம்.எம்.ஜெயலெட்சுமி
மதுரை