PUBLISHED ON : அக் 29, 2025

ஏக்கர் கணக்கில் நிலம் தேவையில்லை. 10 முதல் 20 சென்ட் பரப்பளவில் பத்து வகை கீரைகளை விதைத்து பராமரித்தால் போதும். தினந்தோறும் கிள்ள கிள்ள (அறுவடை) கீரைகள் லாபத்தை அள்ளித்தரும் என்கிறார் மதுரை அருகே கருமாத்துாரை சேர்ந்த கீரை விவசாயி ஜெயச்சந்திரன்.
கீரை விவசாய அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:
விதையில் முளைக்கும் கீரைகளும் உண்டு. ஒருமுறை விதைத்தால் அடுத்தடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் 8 முதல் 9 முறை அறுவடை செய்யும் கீரை வகைகளும் உண்டு. சிவப்பு பொன்னாங்கன்னி கீரை ஒருமுறை விதைத்தால் அடுத்தடுத்து அறுவடை செய்யலாம்.
30 சென்ட் பரப்பில் அரைக்கீரை, 20 சென்ட் அளவில் மணத்தக்காளி, 10 சென்ட் இடத்தில் பாலக்கீரை, 5 சென்ட் பரப்பில் பொன்னாங்கன்னி, 20 சென்ட் பரப்பில் முருங்கை கீரை நடவு செய்துள்ளேன். இடையே தண்டங்கீரை, சிறுகீரை, அகத்தி கீரை என 80 சென்ட் பரப்பளவில் 8 வகை கீரைகளை வளர்க்கிறேன். இன்னும் 40 சென்ட் பரப்பில் முருங்கை பயிரிடுவதற்கான விதை வாங்கி வைத்துள்ளேன்.
நோய், பூச்சி தாக்குதல் இல்லாமல் பாதுகாத்தால் கீரையில் லாபம் இருக்கிறது. நெல்லுக்கு உரமிடு வதைப் போல கீரைகளையும் பராமரிக்க வேண்டும். வீட்டில் மாடுகள் வளர்க்கிறேன். அதனால் முழுவதும் இயற்கை முறையில் தான் கீரை சாகுபடி செய்கிறேன்.
ஆட்டு எரு, மாட்டு சாணம் தான் கீரைகளுக்கு உரம். குறிப்பிட்ட இடைவெளியில் கீரை களுக்கு மாட்டு கோமியம் தெளிக்கிறேன். மாட்டு சாணத்தை கரைசலாக்கி கடலைமாவு, வெல்லம் கலந்து ஜீவாமிர்தம் கரைசலாக தருகிறேன். கருமாத்துார் கீரை என்றாலே எங்கள் தோட்டத்து இயற்கை சாகுபடி கீரை தான் பிரபலம்.
எட்டு வகை கீரைகள் இருப்பதால் தினமும் குறைந்தது 5 வகை கீரைகளை அறுவடை செய்கிறேன். உள்ளூரிலேயே சோழவந்தான், செல்லுார், மீனாட்சிபுரம், திருமங்கலம் பகுதியில் இருந்து வந்து வியாபாரிகள் கீரைகளை வாங்குகின்றனர்.
வெயில் நேரத்தில் பாலக்கீரை விதையை ஒருமுறை விதைத்தால் 20 முறை அறுவடை செய்யலாம். மழைக்காலத்தில் கூடுதலாக நான்கு முறை அறுவடை செய்யலாம். பாலக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை வகைகளை 12 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்தால் அடுத்தடுத்து தழைத்து வளரும். முழு அறுவடை முடிந்த பின் அதே இடத்தில் அதே வகை கீரைகளை விதைக்காமல் இடம்மாற்றி விதைக்க வேண்டும் என்றார்.
இவரிடம் பேச : 76390 75281.
-எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை

