sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பேராசிரியர் விவசாயியாக மாறிய கதை

/

பேராசிரியர் விவசாயியாக மாறிய கதை

பேராசிரியர் விவசாயியாக மாறிய கதை

பேராசிரியர் விவசாயியாக மாறிய கதை


PUBLISHED ON : டிச 03, 2025

Google News

PUBLISHED ON : டிச 03, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.இ., பி.எச்டி., முடித்து விட்டு 15 ஆண்டுகளாக சென்னை, கோவையிலும் கத்தாரில் பேராசிரியராக வேலை செய்த திண்டுக்கல் பழநி பெத்தநாயக்கம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், விவசாயத்தின் மீதுள்ள ஆசையால் இயற்கை விவசாயியாக மாறியுள்ளார். ஆசிரியப் பணியிலிருந்து விவசாயப்பணிக்கு மாறிய அனுபவத்தை விவரித்தார் ராஜேஷ்குமார்.

படித்த படிப்புக்காக ஆசிரியப்பணியில் ஈடுபட்டாலும் பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை இருந்தது. இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் பேச்சுகள் அதற்கு உறுதுணையாக இருந்தது. மொத்தமுள்ள 30 ஏக்கரில் 17 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடுகிறோம். ஐந்து ஏக்கரில் தென்னந்தோப்பில் இயற்கை சாகுபடி செய்கிறேன். 2017ல் இயற்கை விவசாயத்திற்கு மாறினோம்.

அதற்கான சாகுபடி முறைகளை கற்றுக்கொள்ளவே 4 ஆண்டுகளானது. எனது ஒட்டுமொத்த வருமானத்தையும் இந்த மண்ணில் கொட்டியுள்ளேன். நானும் விவசாய உதவியாளரும் நம்மாழ்வாரின் வானகத்தில் பயிற்சி எடுத்தோம்.

நிலத்திலேயே உரத்தயாரிப்பு

ஆரம்பத்தில் கன ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம் போன்ற இயற்கை உரங்களை சிறு டிரம்மில் தயாரித்தேன். தற்போது 12ஆயிரம் லிட்டர் பெரிய தொட்டியில் கனஜீவாமிர்தம் தயாரிக்கிறேன். எனது இயற்கை முறையை அருகில் இருந்து பார்த்த பக்கத்து விவசாயிகள் 4 பேர் இயற்கை சாகுபடிக்கு மாறியுள்ளனர்.

பாரம்பரிய ரகங்கள்

கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, துாயமல்லி, கருங்குறுவை, குள்ளக்கார், கருத்தக்கார், பூங்கார், ஆத்துார் கிச்சடி, வாசனை சீரக சம்பா, ரத்தசாலி, சொர்ணமயூரி, களன்நமக் (புத்தர் சாப்பிட்ட அரிசி), பால் குடவாலை, கொட்டாரம் சம்பா, மணி சம்பா, மிளகு சம்பா, கொத்தமல்லி சம்பா, சிவப்பு கவுனி, காட்டுயானம், கருடன் சம்பா, சிவன் சம்பா நெல் ரகங்களை 17 ஏக்கரில் மாற்றி மாற்றி பயிரிடுகிறேன்.

'ரசகடம்' என்றொரு நெல் ரகம் மூளை கோளாறை சரிசெய்யும் என கேட்டறிந்தேன். கல்லுாரி விழாவுக்கு சென்ற போது ஒரு விவசாயி 40 கிராம் அளவு 'ரசகடம்' நெல் ரகத்தை கொடுத்தார். அதை வைத்து விதை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளேன்.

நிலம் தயாரிப்பு

தண்ணீர்ப்பாசனத்திற்கு ஏற்ப ஒரு போகம் அல்லது இரு போகம் என சாகுபடி செய்கிறேன். நெல் நாற்று நடவுக்கு முன் 5 எண்ணெய் வித்துகள், 5 வாசனை திரவிய வித்துகள், 5 பயறு வகை வித்துகள், 5 வகை சிறுதானியங்கள் என என்னென்ன விதைகள் கிடைக்குமோ அவற்றை விதைக்கிறேன். மேலும் சணப்பை, தக்கைப்பூண்டு, கொழிஞ்சி, அவுரி பசுந்தாள் உரங்கள் பயன்படுத்தி நிலத்தை சத்துள்ளதாக மாற்றுகிறேன். இதனால் எங்கள் வயலில் பூச்சி, தாக்குதல் குறைவு.

ஆடாதொடை, நொச்சி, ஆடு தீண்டாபாலை, பிரண்டை, கற்றாழை, துத்தி செடிகள் தோட்டத்தில் வளர்கின்றன. இந்த இலைகளை சிறு துண்டுகளாக்கி எருமை அல்லது பசு கோமியம் ஊற்றி 15 லிட்டர் கொள்ளளவுள்ள மண்பானையில் இட்டு மண்ணுக்குள் 9 நாட்களுக்கு புதைத்து வைத்தால் 10 வது நாளில் பூச்சி விரட்டி தயார். இது நான்கு மாதம் கெடாது. நெல் வயலில் பூச்சி தாக்குதல் குறைவு என்பதால் தென்னந்தோப்புக்கு இதை பயன்படுத்துகிறேன்.

பயிர்களின் செழித்து வளர, நுண்ணுாட்டத்திற்காக மீன் அமிலம் பயன்படுத்துகிறேன். கன ஜீவாமிர்தம் 25 லிட்டர் கேனில் சொட்டு சொட்டாக பாசன மடை வாயில் விழும்படி செய்துள்ளேன். இதனால் நுண்ணுாட்டம் அதிகரித்து நெல் நாற்றின் துார்கள் அதிகம் வெடித்து நல்ல மகசூல் கிடைக்கும்.

நாற்று நட்ட 15வது நாளில் ஆட்களை வரவழைத்து துளிர்த்து வரும் களைகளை கால்களால் மிதிக்கச் செய்வேன். இம்முறையில் நெல் துார் நிறைய வெடித்து வளரும். நேரடி நெல் விதைப்பின் போது 'கோனோவீடர்' பயன்படுத்தி 20 வது நாளிலும் அடுத்தது 60ம் நாள் கையால் அல்லது கருவியால் களை எடுப்போம்.

களை எடுத்த உடன் ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் மீன்அமிலம் தெளிப்போம். அதன் பிறகு ஒரு வாரம் கழித்தும் 65வது நாள், 100வது நாளில் கன ஜீவாமிர்தம் தருகிறேன். 100வது நாளுக்கு பின் பராமரிப்பு தேவையில்லை.

கருத்தக்கார் அரிசியின் உமி கருப்பாகவும் அரிசி பழுப்பாகவும் இருக்கும்.

மதிப்பு கூட்டுதல்

மாப்பிள்ளை சம்பா, காட்டுயானத்தில் பிரவுன் கலந்த உமி இருக்கும். உள்ளே அரிசி இளம்பழுப்பு நிறத்திலும், வேகவைக்கும் போது நல்ல சிவப்புடன் இருக்கும். பாரம்பரிய ரகங்களை நெல்லாக கொடுக்கும் போது வியாபாரிகளிடம் சரியான விலை கிடைப்பதில்லை. எனவே வயலில் விளைந்த நெல் ரகங்களை ஆறு மாதம் இருப்பு வைத்து 'ரைஸ் மில்' அமைத்து கைகுத்தல் அரிசி உருவாக்குகிறேன்.

இந்த மில்லில் நெல்லின் உமி மட்டும் நீக்கப்பட்டு பாலீஷ் பண்ணாத அரிசியாக வெளிவரும். இதன் மூலம் நுகர்வோருக்கு சரியான விலையில் நஞ்சில்லா, சத்தான அரிசியை தர முடிகிறது. பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களை மதிப்பு கூட்டி சத்துமாவு, கஞ்சிமிக்ஸ், புட்டு மிக்ஸ் உட்பட 60 வகையான மதிப்பு கூட்டிய பொருட்களாக ஏற்றுமதியும் செய்கிறேன்.

ஏழாண்டுகளாக பூச்சிக்கொல்லி, ரசாயன உரத்தை எங்கள் நிலம் பார்க்கவில்லை. வேளாண் கல்லுாரி மாணவர்கள் தங்களது இறுதியாண்டு 'ப்ராஜக்ட்டுக்காக' எங்கள் வயலுக்கு வருகின்றனர். பாரம்பரிய அரிசி ரகங்களை தெரிந்து கொள்கின்றனர் என்றார். இவரிடம் பேச: 98438 44844.

எம்.எம்.ஜெயலெட்சுமி

மதுரை.






      Dinamalar
      Follow us