/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மக்காச்சோள சாகுபடியில் மகசூல் பெற...
/
மக்காச்சோள சாகுபடியில் மகசூல் பெற...
PUBLISHED ON : அக் 01, 2025

அதிக மரபணு மகசூல் திறனைக் கொண்ட மக்காச்சோள பயிர், 'தானியங்களின் ராணி' எனப்படுகிறது. சரியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால் மக்காச்சோளத்தில் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.
மக்காச்சோளம் பயிரிட ஆடிப்பட்டம் (ஜூலை, - ஆகஸ்ட்) புரட்டாசிப் பட்டம் (செப்., அக்., ) மற்றும் தைப்பட்டம் (ஜன., பிப்.,) ஏற்றது. நிலத்தை சட்டி கலப்பையால் ஒருமுறை உழுத பின் ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் தொழுஉரத்தை பரப்பி, மீண்டும் கொக்கி கலப்பையால் கட்டிகள் இன்றி இருமுறை உழவேண்டும். அதனுடன் 4 பாக்கெட் (800 கிராம்) அசோஸ்பைரில்லம் கலந்து கொள்ளலாம்.
பார் இடைவெளி
உழவுக்கு பின் 60 செ.மீ. இடைவெளியில் பார் அமைத்து இறவை பயிராக இருந்தால் அதற்கேற்ப பாசன வாய்க்கால் அமைத்து 10 முதல் 20 சதுர மீட்டர் பாத்தி அமைப்பு உருவாக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும். இறவையில் 60 க்கு 20 செ.மீ., மானாவாரியில் 45 க்கு 20 செ.மீ., இடைவெளியில் 4 செ.மீ. ஆழத்தில் விதைக்கவேண்டும்.
விதைத்தவுடன், நுண்ணுாட்டச் சத்து குறைபாட்டை நீக்க 120 கிலோ மணலுடன் 12 கிலோ அளவு தமிழ்நாடு வேளாண் பல்கலை நுண்ணுாட்டக் கலவை கலந்து துாவ வேண்டும் அல்லது தமிழ்நாடு வேளாண்துறை வெளியிட்டுள்ள நுண்ணுாட்ட கலவை 5 கிலோ உடன் 20 கிலோ மணல் கலந்து இடலாம். துத்தநாக பற்றாக்குறை உள்ள வயல்களில் மணலுடன் கலந்து ஏக்கருக்கு 15 கிலோ துத்தநாக சல்பேட் இடலாம். இதை நிலத்து மண்ணுடன் கலக்காமல் மேலாக துாவ வேண்டும்.
கைகொடுக்கும் வீரிய ஒட்டு ரகங்கள்
வேளாண் பல்கலையின் கோஎச் (எம்) 6, 8, 11 ரகங்களும், வி.ஜி.ஐ.எச் (எம்) 2 ரகங்களும் அதிக மகசூல் தருபவை. சராசரியாக ஏக்கருக்கு இறவையில் 3000 கிலோவும், மானாவாரியில் 2200 கிலோவும் கிடைக்கும்.
களை மேலாண்மை
விதைத்த 3 முதல் 5ம் நாளில் களை முளைப்பதற்கு முன், அட்ராசின் களைக்கொல்லியை ஏக்கருக்கு 100 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். இதைத் தொடர்ந்து 20 முதல் 25ம் நாளில் ஏக்கருக்கு 400 கிராம் அளவு '2, 4-டி' களைக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
உர மேலாண்மை
மண்பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்களை பிரித்து இட வேண்டும். இறவைப்பயிருக்கு அடியுரமாக ஏக்கருக்கு 50 கிலோ யூரியாவை இடவேண்டும். 190 கிலோ சூப்பர் பாஸ்பேட், 50 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். விதைத்த 25ம் நாள் பாதி அளவு யூரியாவையும், மீதியை 50வது நாளுக்கு மேல் இட வேண்டும்.
மானாவாரியில் ஏக்கருக்கு 52 கிலோ தழைச்சத்து, 75 கிலோ மணிச்சத்து, 26 கிலோ சாம்பல்சத்து இட வேண்டும். அடியுரமாக பாதியளவு யூரியா (26 கிலோ), 77 கிலோ சூப்பர் பாஸ்பேட், 26 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். மீதமுள்ள 26 கிலோ யூரியாவை 53 முதல் 60 நாட்களுக்குள் இடவேண்டும்.
பூக்கும் தருணத்தில்
ஆண் மஞ்சரி உருவாகும் பருவம் மற்றும் மணிபிடிக்கும் பருவத்தில் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ டி.என்.ஏ.யு. மக்காச்சோள மேக்சிம் கலந்து இலைவழியாக தெளிக்கவேண்டும். 'ட்ரோன்' இருந்தால் ஒரு ஏக்கருக்கு 19 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் மேக்சிம், 20 மில்லி ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.
நீர் மேலாண்மை
அதிக வறட்சி, அதிகப்படியான ஈரப்பதத்தால் மக்காச்சோள பயிர் பாதிக்கப்படும். குறிப்பாக பூக்கும், மணி பிடிக்கும் பருவமான 45 முதல் 65 நாட்கள் வரை சரியான ஈரப்பதம் இருக்க வேண்டும். மண்ணின் தன்மைக்கேற்ப 9 முதல் 11 முறை நீர் பாய்ச்சலாம்.
படைப்புழு மேலாண்மை
கடைசி உழவில் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். ஒரு கிலோ விதை நேர்த்திக்கு 'சியான் ட்ரானிலிட்ரோல்' 19.8 சதவீதத்துடன் 'தயாமீதாக்சம்' 19.8 சதவீதம் என்ற கலவையை 4 மில்லி பயன்படுத்த வேண்டும்.
வரப்பு பயிராக தட்டைபயறு, எள், துவரை, சூரியகாந்தி, தீவனச்சோளத்தை மூன்று வரிசையில் நட வேண்டும். ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும். விதைத்த 15 முதல் 20 நாட்களில் 1500 பி.பி.எம். 'அசாரக்டினை' ஏக்கருக்கு ஒரு லிட்டர் அல்லது 100 மில்லி அளவு 'ப்ளுபெண்டிமைடு' 480 எஸ்.சி., தெளிக்க வேண்டும். 35 முதல் 40 நாட்களில் ஏக்கருக்கு 80 கிராம் அளவு 'இமாமெக்டின் பென்சோயேட்' 5 எஸ்.ஜி., அல்லது ஒரு கிலோ 'மெட்டாரைசியம்' தெளிக்க வேண்டும்.
குருத்து ஈ கட்டுப்பாடு
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் 'இமிடாகுளேபிரிட்' 70 டபிள்யூ.எஸ்., அல்லது 3.5 மில்லி 'தயாமிதாக்சைம்' டபிள்யூ.எஸ்., கலந்து விதை நேர்த்தி செய்தால் குருத்து ஈக்களை கட்டுப்படுத்தலாம் அல்லது ஏக்கருக்கு 400 மில்லி 'மீத்தைல் டெமட்டான்' 25 இ.சி., அல்லது 460 மில்லி 'டைமித்தோயேட்' 30 இ.சி., கலந்து தெளிக்க வேண்டும். தண்டு துளைப்பான் தாக்குதலுக்கு 260 மில்லி 'டைமித்தோயேட்' 30 இ.சி., அல்லது 60 மில்லி 'குளோரான்ட்ரானிலிப்' 18.5 எஸ்.சி., என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
-சரவணன்,
தொழில்நுட்ப வல்லுநர் (உழவியல்) வேளாண் அறிவியல் மையம்,
திண்டுக்கல்