PUBLISHED ON : செப் 24, 2025

தேனியில் மஞ்சள் சாகுபடி குறித்து துரைமுருகன் கூறியதாவது: இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்து காற்றாலை இன்ஜினியராக வெளிமாநிலங்களில் வேலை பார்த்து தற்போது சொந்த ஊரிலேயே வேலை பார்க்கிறேன். நான்கரை ஏக்கரில் விவசாயத்தையும் சேர்த்து கவனித்துக் கொள்கிறேன்.
60 சென்டில் எலுமிச்சை, நெல்லி மரங்கள் வளர்க்கிறேன். தோட்டத்தில் 200 தென்னை மரங்கள் வளர்த்து அங்கேயே வீடு கட்டியுள்ளேன். அடுத்து மகாகனி, குமிழ், பலா உட்பட 200 மரக்கன்றுகள் நட உள்ளேன்.
நெல்லி, எலுமிச்சை மரங்களுக்கு வரப்பு பயிராக தென்னை, குமிழ், மஞ்சள் கடம்பு மரங்களை வளர்க்கிறேன். கிளரிசீடியா எனும் பசுந்தாள் உரங்களை வளர்க்கிறேன். இதை ஆடு, மாடுகளுக்கு தீவனமாகவும் தரலாம், மரங்களுக்கான பசுந்தாள் உரமாக பயன்படுத்தலாம். இவை மரங்களுக்கு மண்ணிலுள்ள நைட்ரஜன் சத்தை எடுத்துத் தரும். தோட்டத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீர்த்தொட்டியை கட்டியுள்ளேன்.
சோலாரும் சொட்டுநீரும்
காலை, மாலை இரண்டு வேளையும் போர்வெல்லில் இருந்து தண்ணீரை எடுத்து தண்ணீர்த்தொட்டியில் நிரப்புவதற்கு சோலார் உபகரணத்தை பயன்படுத்துகிறேன். தண்ணீர்த் தொட்டியிலிருந்து தோட்டத்தில் உள்ள மரம், செடிகளுக்கு பி.வி.சி., குழாய் இணைத்து 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு தோட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சொட்டுநீர்ப்பாசன குழாய் அமைத்துள்ளேன். போர்வெல் அல்லது தண்ணீர்த்தொட்டி எதிலிருந்தும் தண்ணீரைப் பாய்ச்சும் வகையில் மாற்று ஏற்பாடு செய்துள்ளேன். பால் பண்ணை வைத்துள்ளதால் உள்ளூர் விவசாயிகளின் பாலை வாங்கி மொத்த விநியோகமும் செய்கிறேன். இதுதவிர 20 ஆடு, 50 சிறுவிடை ரக நாட்டுக்கோழிகள் வளர்க்கிறேன். கோழியை இறைச்சிக்காக விற்கிறேன். முட்டையை வீட்டுத் தேவைக்கு பயன்படுத்துகிறேன்.
மஞ்சள் மகிமை
எனது நிலம் செம்மண் பூமி என்பதால் கருணை, சேனைக்கிழங்கு பயிரிட்டபோது கிழங்கின் வளர்ச்சி குறைவாக இருந்தது. இரண்டாண்டுகளுக்கு முன் உறவினர் வீட்டுத் தோட்டத்தில் தைப்பொங்கலுக்கு மஞ்சள் அறுவடை செய்த போது கொஞ்சம் மஞ்சள் கிழங்கு தந்தனர். ஈரோட்டில் மஞ்சளை தனிப்பயிராக சாகுபடி செய்கின்றனர்.
மஞ்சளுக்கு வெயிலும் நிழலும் வேண்டும், இது பத்து மாத பயிர். தேனி மாவட்ட தட்பவெப்பத்திற்கு தனிப்பயிராக வளர்க்க முடியுமா என தெரியாததால் சோதனை அடிப்படையில் மரங்களுக்கு இடையே மஞ்சள் கிழங்கை நடவு செய்த போது 5 கிலோ விதை கிடைத்தது.
அந்த நிலத்தில் மகாகனி, குமிழ், செம்மரம், பலா, தென்னை மரங்களின் இலைகள் உதிர்ந்து மட்கி நிலத்திற்கு உரமாகிறது. பூச்சிக்கொல்லியோ வேறு ரசாயன உரமோ பயன்படுத்தவில்லை. மரத்தின் நிழலும், கீழே விழுந்த இலையும் தான் மஞ்சள் கிழங்கை பக்குவமாக வளர்த்தது.
அந்த விதைக் கிழங்கை விதைத்த போது 100 கிலோவும் அடுத்த சாகுபடியில் 250 கிலோ கிழங்கு கிடைத்தது.
முதலில் வீட்டுத் தேவைக்காக விதைக்கிழங்கை வேகவைத்து பதப்படுத்தி பொடியாக்கினோம். கடந்தாண்டு 54 சென்ட் பரப்பளவில் நடவு செய்தபோது 2 டன் அளவுக்கு பச்சை மஞ்சள் கிழங்கு கிடைத்தது. ஏற்கனவே வளர்கின்றன.
சமீபத்தில் தான் 100 கிலோ விரலி மஞ்சள் கிழங்கை வேகவைத்து கேரளாவிற்கு விற்பனை செய்தேன். கிழங்கு மஞ்சள், பொடி இரண்டையும் விற்கிறேன்.
எங்கள் மஞ்சளில் மஞ்சள் நிறமிருக்காது. உண்மையாகவே மஞ்சள் என்றால் ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்கும். இதில் 'குர்குமின்' வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. தற்போது 200 கிலோ அளவு விதைக்கிழங்கு இருப்பு வைத்துள்ளேன். வேரிலுள்ள கிழங்கு பெரிதாக வளரும், அதைத்தான் முகத்திற்கு பூசும் மஞ்சளாக பயன்படுத்துகிறோம், மற்றதை விரலி மஞ்சளாக குழம்புக்கு பயன்படுத்துகிறோம்.
தைப்பொங்கலுக்கு செடியுடன் மஞ்சள் கன்றுகளை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் கிடைத்தது என்கிறார் துரைமுருகன்.
இவரிடம் பேச: 88704 50369.
-எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை.