PUBLISHED ON : ஆக 05, 2026

கோழி வளர்ப்பிற்கு உகந்த இயற்கை தீவனம் குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.சத்தியபாணி கூறியதாவது:
களிமண் நிலத்தில், நாட்டு சுரைக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், கீரை, பழங்கள், பூக்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். விளை பொருட்களுக்கு, ரசாயன உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகிறேன்.
மேட்டுப்பாத்தியில் கீரை மற்றும் காய்கறி சாகுபடி செய்துள்ளேன். நல்ல மகசூல் கொடுக்கிறது. அந்த வரிசையில், இயற்கை தீவனங்கள் அளித்து, சிறுவிடை, பெருவிடை ஆகிய நாட்டுக்கோழிகள் வளர்த்து வருகிறேன்.
குறிப்பாக, நாட்டுக்கோழி குஞ்சுகளுக்கு கம்பு, சோளம் ஆகிய சிறுதானிய பயறுகளையும், பொன்னாங்கன்னி, சிறு கீரை உள்ளிட்ட பல்வேறு கீரை வகைகளையும் தீவனமாக அளித்து வருகிறேன்.
நான்கு மாதங்களுக்கு பின், விற்பனை செய்து விடுவேன். அதன் மூலமாக, கணிசமான வருவாய் ஈட்டுவதற்கு வழிவகுக்கும்.
ஒரு சில நாட்டுக்கோழி வளர்ப்போர், கருவாடு கலந்த தீவனத்தை வழங்குவர். இ யற்கை விளை பொருட்களுடன் கூடிய தீவனம் தயாரித்து வழங்குவதால், எங்கள் கோழிகளுக்கு எப்போதும் கிராக்கியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
பி.சத்தியபாணி,
93808 57515.
