PUBLISHED ON : செப் 08, 2026

மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும் பசுந்தீவனத்தை உடனடியாக பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் வீணாக்குகின்றனர். அதே நேரத்தில் கோடைக்காலங்களில் தீவனப் பற்றாக்குறையால் பால் உற்பத்தி குறைகிறது. இந்த முரண்பாட்டிற்கு தீர்வாக அமைவதே 'சைலேஜ்' எனும் ஊறுகாய்ப்புல் முறை.
சோளம், மக்காச்சோளம், நேப்பியர் புல், கம்பு, கலப்பு பசுந்தீவனப் பயிர்களை அறுவடை செய்து சிறு துண்டுகளாக்கி காற்று புகாத நிலையில் இறுக்கமாக அடைத்து இயற்கையான நொதித்தலின் மூலம் பாதுகாக்க வேண்டும். இந்த முறையில் தீவனத்தின் சத்துகள் பாதுகாக்கப்படுவதோடு நீண்ட காலம் கெடாமல் சேமிக்க முடிகிறது. இவற்றில் மக்காச்சோளத்தில் அதிக சர்க்கரைச் சத்து இருப்பதால் பால் முதல் மாவு நிலை வரை அறுவடை செய்தால் அதிக ஊட்டச்சத்து, நல்ல செரிமானத் திறன் கிடைக்கும். கம்பு தானியத்தை பூக்கும் பருவத்திலும் தீவன சோளத்தை 50 சதவீத பூக்கும் பருவம் முதல் மாவு நிலை வரையும் நேப்பியர் புல்லை 45 முதல் 60 நாட்களில் அறுவடை செய்யலாம்.
தீவனத்தை 1 - 2 செ.மீ., நீளத்தில் வெட்டி இதற்கென உள்ள குழி அல்லது பைகளில் நிரப்ப வேண்டும். ஒவ்வொரு அடுக்கையும் நன்கு மிதித்து குழி அல்லது பையிலுள்ள காற்றை வெளியேற்ற வேண்டும். தேவைப்பட்டால் ஒரு டன் தீவனத்திற்கு 10 முதல் 20 கிலோ வெல்லத்தை தண்ணீரில் கரைத்து தெளிக்கலாம். பாலிதீன் தாளால் மூடி அதன் மேல், மண் அல்லது மணல் மூடைகள் வைத்து இறுக்கமாக மூட வேண்டும். 45 முதல் 60 நாட்கள் கழித்து சைலேஜ் தயாராகி விடும். பச்சை அல்லது மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் இனிமை கலந்த புளிப்பு மணம், ஒட்டும் தன்மை, பூஞ்சை இல்லாமல் இருந்தால் தரமான சைலேஜ் தயாராகி விட்டதென அர்த்தம். இதன் மூலம் ஆண்டு முழுவதும் வறட்சியிலும் கால்நடைகளுக்கு சீரான தீவனத்தை வழங்கலாம். தீவனச் செலவு குறையும்.
கால்நடைகளுக்கு தரமான தீவனம் கிடைக்கும். கருமை அல்லது அடர் பழுப்பு நிறத்தில் துர்நாற்றம் வீசினால் கால்நடைகளுக்கு தரக்கூடாது.
-சபரிநாதன், அருண்ராஜ், தொழில்நுட்ப வல்லுனர்கள், சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், தேனி.
