தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/ சூரியகாந்தியில் விதைநேர்த்தி

 சூரியகாந்தியில் விதைநேர்த்தி

 சூரியகாந்தியில் விதைநேர்த்தி


PUBLISHED ON : செப் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



எ ண்ணெய் வித்துப் பயிரான சூரியகாந்தி குறுகிய காலத்தில் அறுவடைக்கு வருவதுடன் குறைந்த நீரிலும் நன்றாக வளரும். தமிழகத்தில் இறவை மற்றும் மானா வாரியில் சாகுபடியாகிறது.

வீரிய ஒட்டு ரகங்கள் கே.பி.எஸ்.எச். 1, 44, டி.ஆர்.எஸ்.எச். 1, டி.என்.ஏ.யு.,சன்பிளவர் ஹைபிரிட் சிஓ 2 வீரிய ஒட்டு ரகங்கள் சாகு படிக்கு ஏற்றவை.

நிலத்தை 3 முறை உழுது புழுதியாக்க வேண்டும்.

கடைசி உழவின்போது மட்கிய தொழுஉரம் அல்லது ஒரு எக்டேருக்கு 12.5 டன் கம்போஸ்ட் உரம் இடலாம். நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப பாத்தி, பார், வாய்க்கால்களை அமைத்து வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

விதை கடினப்படுத்துதல் மானாவாரி சாகுபடியில் விதை கடினப்படுத்துதல் ஆரம்ப முளைப்பு மற்றும் வறட்சியைத் தாங்கும் திறனை மேம்படுத்த உதவும். விதைகளை ஒரு சதவீத பொட்டாசியம் குளோரைடு கரைசலில் ஈரப்படுத்தி நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

விதை மூலம் பரவும் பூஞ்சை நோய்களைத் தடுக்க ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைநேர்த்தி செய்யலாம். ஆரம்ப வளர்ச்சியை ஊக்குவிக்க விதையுடன் தலா 25 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். வீரிய ஒட்டு ரகங்களுக்கு 60 க்கு 30 செ.மீ. இடைவெளி வீதம் விதைகளை 3 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும்.

இறவை சாகுபடி எனில் எக்டேருக்கு 4 கிலோ, மானாவாரிக்கு 5 கிலோ விதை தேவை. விதைத்த 10ம் நாளில் கூடுதல் செடிகளை கலைத்து விட்டு ஒவ்வொரு இடத்திலும் ஆரோக்கியமான ஒரு செடியை மட்டும் வளர்க்க வேண்டும்.

உர மேலாண்மை ஒரு ஏக்கருக்கு எனில் யூரியா 53 கிலோ, சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 228 கிலோ, பொட்டாசியம் குளோரைடு 40 கிலோ தேவைப்படலாம். மண் பரிசோதனை செய்யும் போது இந்த அளவை மாற்ற வேண்டும்.

சூரியகாந்தியில் எண்ணெய் உற்பத்தி மற்றும் பயிரின் சீரான வளர்ச்சிக்கு கந்தகம் உதவும். எக்டேருக்கு 20 கிலோ கந்தகம் வழங்கலாம்.

கந்தகத்தின் மூலமாக ஜிப்சம், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் அல்லது அம்மோனியம் சல்பேட் போன்ற உரங்களைப் பயன்படுத்தலாம். சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்தும்போது அதிலுள்ள கந்தகத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீர்ப்பாசனம் விதைத்தவுடன் நீர்ப்பாசனமும், பின்னர் 4ம் நாள், அதன் பிறகு மண், பருவநிலைக்கு ஏற்ப நீர்ப்பாய்ச்ச வேண்டும். மொட்டு உருவாகும் நிலை, பூக்கும் நிலை, விதை நிரப்பும் நிலைக்கு நீர்ப்பாசனம் அவசியம். விதைத்த 15வது, 30வது நாளில் கையால் கொத்தி களை எடுக்க வேண்டும். அல்லது களைக்கொல்லி பயன் படுத்தலாம்.

தேனீக்கள் அவசியம் அதிக மகசூல் பெறுவதற்கு விதைப்பிடிப்பு அவசியம் என்பதால் எக்டேருக்கு 5 தேனீக் கூட்டங்களை வைத்து இயற்கையான மகரந்தச் சேர்க்கையை அதிகரிக்கலாம். இந்த நேரத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்கக் கூடாது.

பூந்தலை முழுமையாக விரியும் காலை 9:00 முதல் 11:00 மணி வரை மென்மையான முறையில் கை மகரந்தச் சேர்க்கை மேற்கொண்டால் விதைப்பிடிப்பை மேம்படுத்தலாம். மேலும் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் போரக்ஸ் கலந்து தெளித்தால் சூரியகாந்தியில் திரட்சியான விதைகளுடன் நல்ல மகசூல் பெறலாம்.

-அரிபுத்திரன் வேளாண்மை அலுவலர் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர் அலைபேசி:82480 80922

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us