37 வினாடிகளில் 26 குட்டிகரணம் நீச்சல் குளத்தில் சாதித்த மாணவன்
37 வினாடிகளில் 26 குட்டிகரணம் நீச்சல் குளத்தில் சாதித்த மாணவன்
ADDED : ஆக 12, 2024 07:20 AM

தட்சிண கன்னடா: மங்களூரைச் சேர்ந்த 13 வயது சிறுவன், தண்ணீரில் மூச்சை பிடித்தபடி 37 வினாடிகளில், 26 குட்டிகரணம் எனும் 'சம்மர் சால்ட்' அடித்து, நோபல் உலக சாதனை படைத்துள்ளார்.
சா திக்க ஆர்வம்
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரைச் சேர்ந்தவர் அனில் விகாஸ். இவரது மகன் ஹத்ரியன் விகாஸ், 13. மங்களூரில் உள்ள கார்மல் சி.பி.ஏ.எஸ்.சி., பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
நீச்சலில் ஆர்வம் உள்ள ஹத்ரியன் விகாசை, கோடை விடுமுறை பயிற்சிக்கு அவரது தந்தை அனுப்பி வந்தார். நீச்சலில் தேர்ச்சி பெற்ற ஹத்ரியன், சாதிக்க வேண்டும் என நினைத்தார்.
தண்ணீரில் குட்டிகரணம் அடிப்பது குறித்து தனது பயிற்சியாளர் அரோமலிடம் கூறினார். அவரும் மாணவருக்கு தீவிர பயிற்சி அளித்து வந்தார்.
மங்களூரில் உள்ள எம்மிகெரே சர்வதேச நீச்சல் குள மையத்தில் நேற்று 37 வினாடிகளில் 26 குட்டி கரணம் அடித்தார்.
இந்த சாதனையை, நோபல் உலக சாதனை அமைப்பு மாநில இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி முன் நிகழ்த்தினார். அவரும், மாணவரின் சாதனையை உறுதி செய்தார். 'நோபல் உலக சாதனை' படைத்ததாக தெரிவித்தார்.
2 வயது முதல்
மாணவரின் தந்தை அனில் விகாஸ் கூறுகையில், ''ஹத்ரியனுக்கு 2 வயது இருக்கும் போது, நீச்சல் குளத்துக்கு அழைத்து சென்றேன். நீச்சல் மீது ஆர்வம் இருந்ததால், பயிற்சி அளிக்க முடிவு செய்தேன்.
''இதற்காக ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் நீச்சல் பயிற்சியில் சேர்த்தேன். இப்படியொரு திறமை இருக்கும் என்று தெரியவில்லை. இந்த சாதனை புரிய, அவரின் பயிற்சியாளர் தான் காரணம்,'' என்றார்.
பயிற்சியாளர் அரோமல் கூறுகையில், ''ஆரம்பத்தில் நீச்சல் குளத்தின் ஓரத்தில், தடுப்பு சுவரை பிடித்து கொண்டு குட்டி கரணம் அடித்து வந்தார். தற்போது நீச்சல் குளத்தின் மத்திய பகுதியில் 26 குட்டி கரணம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதனால், பயிற்சி அளித்த எனக்கு பெருமையாக உள்ளது.
''கோடை காலத்தில் சிறப்பு பயிற்சி அளித்து வந்தேன். இந்த சாதனைக்காக, கடந்த பத்து மாதங்களாக பயிற்சி மேற்கொண்டார்,'' என்றார்.
மாணவர் ஹத்ரியன் விகாஸ் கூறுகையில், ''எனக்கு நீச்சல் அடிக்க மிகவும் பிடிக்கும். விடுமுறையில் நீச்சல் பயிற்சிக்காக வருவேன். ஆரம்பத்தில் ஏழு அல்லது எட்டு குட்டிகரணம் அடித்தேன். இன்று 26 குட்டிகரணம் அடித்திருப்பது பெருமையாக உள்ளது. எனது அடுத்த இலக்கு கின்னஸ் உலக சாதனை படைப்பதாகும்,'' என்றார்.
மாணவரின் சாதனையை பள்ளியின் விளையாட்டுத்துறை பிரதிநிதி பிரவீன் டிசோசா, மங்களூரு ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் பொது மேலாளர் அருண் பிரபா ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர்.
ஹத்ரியன் விகாஸ்