நிரம்பிய கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் கர்நாடக அரசு சார்பில் சீர்வரிசை சமர்ப்பணம்
நிரம்பிய கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் கர்நாடக அரசு சார்பில் சீர்வரிசை சமர்ப்பணம்
ADDED : ஜூலை 30, 2024 07:44 AM

பெங்களூரு: நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் அடுத்தடுத்து நிரம்பின. இரு அணைகளுக்கும், கர்நாடக அரசு சார்பில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் 'சீர்வரிசை சமர்ப்பணம்' செய்தனர்.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கபிலா, காவிரி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் இறங்க வேண்டாம் என்று ஆற்றங்கரையோர மக்களுக்கு நீர்ப்பாசன துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர் மழையால், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
68,845 கனஅடி நீர்
மைசூரில் உள்ள கபினி அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டி.எம்.சி., நேற்றைய நிலவரப்படி, வினாடிக்கு, 20,346 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து, வினாடிக்கு 11,833 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், 18.75 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.
இதுபோன்று, மாண்டியாவில் கே.ஆர்.எஸ்., அணையின் மொத்த கொள்ளளவு 49.45 டி.எம்.சி., ஆகும். நேற்றைய நிலவரப்படி, அணைக்கு, வினாடிக்கு, 57,012 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து, வினாடிக்கு 33,462 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே அணையில் 49.45 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.
இரண்டு அணைகளில் இருந்தும், வினாடிக்கு 68,845 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில், கபினி அணை நீர் முழுதும் தமிழகத்துக்குச் செல்கிறது. கே.ஆர்.எஸ்., அணை நீரில், சற்று கர்நாடக கால்வாய்களுக்கும், மீதி தமிழகத்துக்கும் செல்கிறது.
மங்கள பொருட்கள்
இரண்டு அணைகளும் நிரம்பிவிட்டன. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி, உபரி நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
அணைகள் நிரம்பும்போது, கர்நாடக அரசு சார்பில், மங்கள பொருட்களுடன் சீர்வரிசை சமர்ப்பிப்பது வழக்கம். மன்னர் காலத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அந்த வகையில், கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய இரண்டு அணைகளுக்கும், கர்நாடக அரசு சார்பில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர், முறங்களில் மங்கள பொருட்களுடன் நேற்று சீர்வரிசை சமர்ப்பணம் செய்தனர்.
கே.ஆர்.எஸ்., அணை பகுதியில், நிறுவப்பட்டுள்ள நால்வடி கிருஷ்ணராஜா உடையார் மன்னரின் சிலையை இருவரும் திறந்து வைத்தனர்.

