வேகமாக பரவும் குரங்கம்மை தொற்று கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு
வேகமாக பரவும் குரங்கம்மை தொற்று கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு
ADDED : ஆக 20, 2024 01:58 AM
புதுடில்லி, ஆக. 20-
'எம்பாக்ஸ்' எனப்படும், குரங்கம்மை தொற்று பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவி வருவதால், அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
'எம்பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை தொற்று, ஆப்ரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
தொற்று பாதிப்பு
கடந்த 2022 முதல் உலகம் முழுதும் உள்ள 116 நாடுகளில் 99,176 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 208 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022 முதல், இந்தியாவில் 30 பேருக்கு குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடைசியாக, 2024, மார்ச்சில் கூட நம் நாட்டில் இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் 10க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தீவிரம்அடைந்துள்ளது.
இதையடுத்து, குரங்கம்மை பரவலை எதிர்கொள்வது குறித்து, பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது.
இதை தொடர்ந்து, நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களில் உச்சபட்ச கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு குரங்கம்மை அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் உள்ள 32 பரிசோதனை கூடங்களில் குரங்கம்மை தொற்றை கண்டறியும் வசதிகள் உள்ளன. டில்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, சப்தர்ஜங் மற்றும் லேடி ஹார்டிங்க் மருத்துவமனைகள், குரங்கம்மை சிகிச்சைக்கான சிறப்பு மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அனைத்து மாநிலங்களிலும் இதுபோல சிறப்பு மையங்களை அடையாளம் காண மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து தரை வழியே வரும் எல்லைகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுஉள்ளது.
தற்போதைய நிலையில் நம் நாட்டில் குரங்கம்மை தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும், தற்போது பரவி வரும் தொற்று வகை அதிதீவிரம் உடையதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.