அதிகரிக்கும் குரங்கு காய்ச்சல்; சிக்கமகளூரு மக்கள் அச்சம்
அதிகரிக்கும் குரங்கு காய்ச்சல்; சிக்கமகளூரு மக்கள் அச்சம்
ADDED : ஜன 27, 2025 10:17 PM
சிக்கமகளூரு; கோடை காலத்துக்கு முன்பே, சிக்கமகளூரு மாவட்டத்தை குரங்கு காய்ச்சல் வாட்டி வதைக்கிறது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆறு பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஷிவமொக்கா, சாகராவின், காசனுார் கிராமத்தில், 1957ல் முதன் முதலில் குரங்கு காய்ச்சல் தென்பட்டது. காட்டுப்பகுதியில் இருந்து பரவியதால், இதற்கு கே.எப்.டி., என பெயர் சூட்டப்பட்டது. இது குரங்கில் இருந்து, மனிதர்களுக்கு பரவுகிறது.
அதன்பின் இக்காய்ச்சல் சிக்கமகளூரு உட்பட, சில மாவட்டங்களில் பரவ துவங்கியது. பொதுவாக கோடை காலத்தில் குரங்கு காய்ச்சல் பரவும். ஆனால் சமீப காலமாக குளிர்காலத்திலேயே காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. சிக்கமகளூரின், என்.ஆர்.புரா, கொப்பாலில் ஆறு பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டதால், இப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
இது தொடர்பாக, சுகாதார அதிகாரிகள் கூறியதாவது:
குரங்கு காய்ச்சல் பரவுவதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தலைவலி, காய்ச்சல், குளிர், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள். இந்த அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மூன்று முதல் எட்டு நாட்கள் நோயின் தாக்கம் இருக்கும்.
குரங்கு காய்ச்சலுக்கு நிர்ணயிக்கப்பட்ட சிகிச்சைமுறை இல்லை. நோயின் அறிகுறியின் அடிப்படையில், சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாலுகா, மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்கிறது.
1ஆரம்ப கட்டத்திலேயே, சிகிச்சை பெற வேண்டும்
2குரங்குகள் இறந்தது தெரிந்தால், உடனடியாக சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
3வனப்பகுதிக்கு செல்லும்போது, உடலை மறைத்தபடி உடை அணிய வேண்டும்
4வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, கை, கால்களில் தேங்காய் எண்ணெய் அல்லது கிருமி நாசினி தடவிக் கொண்டு செல்வது நல்லது
5வனப்பகுதிக்கு சென்று வந்த பின், உடைகளை வென்னீரில் துவைத்து விட்டு குளிக்க வேண்டும்
6வனத்தில் மேய்ந்து விட்டு திரும்பும் கால்நடைகளின் உடலை சுத்தப்படுத்த வேண்டும்
7வனத்தில் இருந்து விறகுகள் அல்லது இலைகளை சேகரிக்க வேண்டாம்.