ஒலிம்பிக் போட்டி நடத்துவதில் இந்தியா ஆர்வம்; உலக தடகள சங்க தலைவர் மகிழ்ச்சி
ஒலிம்பிக் போட்டி நடத்துவதில் இந்தியா ஆர்வம்; உலக தடகள சங்க தலைவர் மகிழ்ச்சி
ADDED : நவ 26, 2024 10:34 PM

புதுடில்லி: ''வரும் 2036ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்தும் இந்தியாவின் ஆர்வத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி'' என உலக தடகள தலைவர் செபாஸ்டியன் கோ கூறினார்.
68 வயதான செபாஸ்டியன் கோ, இரண்டு முறை ஒலிம்பிக்கில் 1,500 மீட்டர் தடகளத்தில் சாம்பியன் ஆவார்.
கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்திய ஏற்பாட்டுக் குழுவின் தலைவர். செபாஸ்டியன் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோரை சந்தித்தார்.இந்த சந்திப்பின்போது ஒலிம்பிக்-2036 போட்டியை நடத்துவதற்கான இந்தியாவின் வாய்ப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.
இச்சந்திப்பு குறித்து செபாஸ்டியன் கூறியதாவது:
இந்தியா வளர்ந்து வரும் விளையாட்டு சக்தியாகும், ஆனால் இதுவரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவில்லை. ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா ஆர்வமாக உள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
ஒலிம்பிக் போட்டிகள் ஒரு தனித்துவமான விளையாட்டு நிகழ்வு.
இந்தியா, விளையாட்டுத் துறையைத் தாண்டி சமூக மற்றும் பொருளாதார நன்மைகளை வழங்குவதற்கான பார்வை கொண்ட நாடாகவும் உள்ளது.
இந்தியாவுடன் இந்தோனேஷியா, எகிப்து, துருக்கி, கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் 2036 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டி வருகின்றன.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் 2028 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரம் 2032 ஒலிம்பிக்கை நடத்தவுள்ளது.
இவ்வாறு செபாஸ்டியன் கூறினார்.