கரியாசல்லி தீவில் ரூ.50 கோடியில் செயற்கை பவளப்பாறைகள் உருவாக்கம்
கரியாசல்லி தீவில் ரூ.50 கோடியில் செயற்கை பவளப்பாறைகள் உருவாக்கம்
UPDATED : மே 28, 2025 02:42 AM
ADDED : மே 28, 2025 12:14 AM

சென்னை: துாத்துக்குடி மாவட்டத்தை ஒட்டிய கரியாசல்லி தீவில், 8,500 செயற்கை பவளப்பாறைகள் உருவாக்கப்பட்டு உள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களை ஒட்டிய கடல் பகுதி, மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்காவாக வரையறுக்கப்பட்டு உள்ளது. இதில், 21 தீவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றான கரியாசல்லி தீவு, வனத்துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த, 1969ல், 51 ஏக்கராக இருந்த இத்தீவின் பரப்பளவு, கடல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளால், தற்போது, 14 ஏக்கராக சுருங்கியுள்ளது.
இந்நிலையில், இங்கு செயற்கை முறையில் பவளப்பாறைகளை உருவாக்க, வனத்துறை திட்டமிட்டது. இதற்காக, தமிழக அரசு, 50 கோடி ரூபாயை ஒதுக்கியது. தற்போது, செயற்கை பவளப்பாறைகள் உருவாக்குவதில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்காவில், கரியாசல்லி தீவில் செயற்கை பவளப்பாறைகள் உருவாக்கும் திட்டத்தில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யும், துாத்துக்குடியை சேர்ந்த எஸ்.டி.எம்.ஆர்.ஐ., கல்வி நிறுவனமும் இணைந்து, இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
உள்ளூர் மக்கள், 300 பேர் இதில் நேரடியாக பங்கேற்றுள்ளனர். இங்கு பல்நோக்கு முறையில் பயன்படுத்தத்தக்க, 8,500 செயற்கை பவளப்பாறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அதன்படி, இங்கு இயற்கையாக உருவான பவளப்பாறைகள் சிதிலமடைந்த, 2 கி.மீ., தொலைவு பகுதிகளில், இந்த செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்பட்டு, சூழல்தன்மையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 3 கி.மீ., தொலைவுக்கு சிதிலம்அடைந்த கடற்புல் படுகையும் சீரமைக்கப்பட்டுள்ளது. இத்தீவை சுற்றியுள்ள கடலில் மீதம் உள்ள பகுதிகளிலும், இதே முறையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.