/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலகின் அரிய தாவரங்களின் சங்கமம் புதுச்சேரி தாவரவியல் பூங்கா
/
உலகின் அரிய தாவரங்களின் சங்கமம் புதுச்சேரி தாவரவியல் பூங்கா
உலகின் அரிய தாவரங்களின் சங்கமம் புதுச்சேரி தாவரவியல் பூங்கா
உலகின் அரிய தாவரங்களின் சங்கமம் புதுச்சேரி தாவரவியல் பூங்கா
ADDED : ஜன 12, 2025 06:26 AM

புதுச்சேரியை கைப்பற்றிய பிரெஞ்சியர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் நகர பகுதியில் ஆங்காங்கே சிறிய பூங்காவை ஏற்படுத்தினர்.
1826ல் தெற்கு புல்வாரும் - மேற்கு புல்வாரும் சந்திக்கும் இடத்தில் 22 ஏக்கர் பரப்பளவில் புதிய தோட்டத்தை ஏற்படுத்தினர். அதன் ஒரு பகுதியை அரசதோட்டம் என்றும், கொலோனியால் தோட்டம் என்றும் அழைத்து வந்தனர்.
இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விளைந்த தாவரங்கள், பயிர்களை கொண்டு வந்து ஆராய்ச்சி செய்தனர்.
பிரெஞ்சியர்களின் குடியேற்ற நாடுகளுக்கு பரவ செய்தனர். குறிப்பாக இங்கு வளர்ந்த அரிய தாவரங்களை புர்போன், ரீயூனியன், மேற்கிந்திய தீவுகள், பிரான்ஸ் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
1829 ம் ஆண்டில் 7,500 சதுர மீட்டர் பரப்பளவில் 900 வகையான தாவர இனங்கள் இருந்ததாக பிரபல பயணி விக்டர் ஜாக்மாண்ட் அறிவித்து இருந்தார். ஆனால் 1830ம் ஆண்டு வீசிய புயல் பூங்காவை புரட்டிபோட்டது.
இச்சூழ்நிலையில் 1834ல் பெரோதெத் தாவரவியல் பூங்காவிற்கு மறு உயிர் கொடுத்தார். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்த தாவரங்களையெல்லாம் புதுச்சேரிக்கு கொண்டு வந்து, வளர்த்தார். இதனால் கொலோனியல் பூங்கா தாவரங்களின் ஆய்வு மையமாக மாறியது. 1867ல் பெரோதெத் தோட்டத்தில் இருந்த அனைத்து தாவரங்களையும் வகைப்படுத்தி பட்டியலை வெளியிட்டார்.
அவருக்கு பின் பொறுப்பேற்ற கோன்தெஸ்த் லகூர், ரெனோ, அர்ஷார், பெலித்தியே, பாதிரியார் தெசன், விகர் ஜெனரல் வெவேய், டாக்டர் பரமானந்த் மரியதாசு, சுப்ரமணிய பிள்ளை, ழிப்லோன், பிகோ ஆகியோர் பூங்காவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினர்.
இவர்களில் ரெனோ என்பவர், 1885ல் பூங்காவில் ஒரு வேளாண் கண்காட்சி நடத்தி, தற்போதைய மலர் கண்காட்சிக்கு பிள்ளையார் சுழிபோட்ட வரலாறும் உண்டு. 1948ல் பிரெஞ்சிய நிர்வாகம் கொலோனியல் என்ற சொல்லை நீக்கினர். அதை தொடர்ந்து தாவரவியல் பூங்கா என அழைக்க துவங்கியது. உள்ளூர் மக்களோ செங்கிலியன் தோட்டம் என்றே அழைத்து வந்துள்ளனர்.
புதுச்சேரி இந்தியாவுடன் 1960 முதல் வேளாண் துறையின் தோட்டக்கலை பிரிவு பராமரித்து வருகிறது. இன்றைக்கு 198 பேரினத்தை சேர்ந்த 2,200 மரங்கள் கொண்ட ஆக்சிஜன் தொழிற்சாலையாக தாவரவியல் பூங்காவில் உள்ளதாக குறிப்புகள் உள்ளன.
கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரே தாவரவியல் பூங்கா என்ற பெருமை கொண்ட தாவரவியல் பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது புனரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பசுமை போர்த்திய இயற்கை அன்னையான தாவரவியல் பூங்கா, விரைவில், தனது நிழலில் இளைப்பாற, உற்சாகத்துடன் மகிழ்விக்க புதுச்சேரி மக்களை அழைக்கும்.