/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வானில் தோன்றிய நட்சத்திரங்கள்: பீதியில் உறைந்த புதுச்சேரி மக்கள் அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
/
வானில் தோன்றிய நட்சத்திரங்கள்: பீதியில் உறைந்த புதுச்சேரி மக்கள் அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
வானில் தோன்றிய நட்சத்திரங்கள்: பீதியில் உறைந்த புதுச்சேரி மக்கள் அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
வானில் தோன்றிய நட்சத்திரங்கள்: பீதியில் உறைந்த புதுச்சேரி மக்கள் அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...
ADDED : மே 11, 2025 01:11 AM
நமது பிரபஞ்சம் மர்மங்களால் நிறைந்தது. நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள், கருந்துளைகள் மற்றும் பல அதிசயங்களால் நிரம்பிய ஒரு அற்புதமான இடம் தான் பிரபஞ்சம்.
பிரபஞ்சத்தின் அங்கமாக இருக்கும் பூமியின் வானில் எண்ணவே முடியாத அளவிற்கு நட்சத்திரங்கள் மின்னுகின்றன. ஆயுள் முடிந்ததும் மறைகின்றன.
அதேபோல் புதிய விண்மீன்கள் தோன்றுவதும், மறைவதும், நெருப்பு குழம்பாக பூமியில் விழுவதும் இயல்பாகவே நடந்து வருகின்றன. அப்படி தோன்றிய நட்சத்திரம் ஒன்று அக்காலத்தில் புதுச்சேரியில் புதிய பூகம்பத்தை ஏற்படுத்தி புதுச்சேரி மக்களை பீதியில் பல நாட்கள் அலற வைத்துள்ளது. இந்த சம்பவம் 1743ல் டிசம்பர் 19ம் தேதி நடந்தது.
அன்றைய தேதியில் புதுச்சேரியில் பட்டப்பகலில் முதலில் ஒரு நட்சத்திரம் காணப்பட்டது. பின்னர் மேலும் ஒரு நட்சத்திரம் தெரிந்தது. ஜோதிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை இருந்த காலத்தில் என்ன விபரீதம் நடக்க போகிறதோ என மக்கள் பேசிக்கொண்டனர்.
அதே தேதியில் மற்றொரு சம்பவமும் நடந்தது. மாலை 4:00 மணிக்கு வட மேற்கு மூலையில் ஒரு நட்சத்திரம் பூசணிக்காய் பருமனில் நெருப்பை கக்கியப்படி எரிந்து கொண்டு விழுந்தது. புதுச்சேரி மக்கள் எல்லோரும் அதனை பார்த்து திகிலில் உறைந்தனர்.
இப்படி பட்டப் பகலில் எந்த காலத்திலும் நட்சத்திரம் எரிந்து விழுந்தது கிடையாது. புதுச்சேரியில் என்ன விபரீதம் நடக்க போகிறதோ என பீதியடைந்தனர்.
இச்சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பின்னர் மாலையில் மேற்கு திசையில் ஒரு வால் நட்சத்திரம் தோன்றியது. அதை அனைவரும் துாமகேது என்று அழைக்கலாயினர். இதைக்கண்டும் புதுச்சேரி மக்கள் பீதி அடைந்தனர்.
மக்கள் எதிர்பார்த்ததை போன்ற கவலைக்கிடமான செய்திகள் புதுச்சேரி நோக்கி வந்து கொண்டு இருந்தன. மராட்டியர்கள், நிசாம் ஆசப்ஷா குமாரன் நாசர் சிங்கை சரிகட்டிவிட்டு செங்கம் கணபவாய் தாண்டி புறப்பட்டு விட்டர்கள் என்ற தகவல் ஆற்காட்டிற்கு வந்து சேர்ந்தது.
ஆற்காடு மக்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த மராட்டிய ஆக்ரமிப்பு, அதன் விளைவாக நடந்த சேதம், கொலைகள், கொள்ளைகள் ஞாபகத்திற்கு வந்தது. விளைவு, ஆற்காட்டு பட்டணத்து மக்கள் பீதி அடைந்து முண்டியடித்துக் கொண்டு பாதுகாப்பிற்காக கோட்டை நோக்கி ஓடினர்.
கோட்டையில் நெருக்கி கொண்டு நுழைந்தபோது ஒரே நேரத்தில் நெரிசலில் சிக்கி 30 பேர் இறந்து போயினர். ஆற்காட்டு பட்டணம் வெறிச்சோடி இருந்தது என்ற செய்தி புதுச்சேரி வந்து சேர்ந்தது.
இந்த ஆக்ரமிப்பிற்கும், வானத்தில் கண்ணுற்ற நட்சத்திரங்களின் போக்கிற்கும் தொடர்பு இருப்பதாக புதுச்சேரி மக்கள் கருதி திகிலுடனே இருந்தன. நல்ல வேளையாக எந்த விபரீதங்களும் புதுச்சேரிக்கு நடக்கவில்லை.
இந்த சம்பவம் புதுச்சேரி வரலாற்று பக்கங்களில் பதிவாகியுள்ளது. இனிமேல் என்ன நடக்குமோ தெரியாது. பட்ட பகலில் நட்சத்திரம் காண்பதும், பட்ட பகலில் நட்சத்திரம் வீழ்ந்ததும் விபரீத காலங்களில் காணும் காட்சி என பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு ஏற்றார்போல் தற்போது சம்பவங்கள் நடக்கின்றன என்று ஆனந்த ரங்கபிள்ளையும் தனது நாட்குறிப்பில் ஆழமாகவே பதிவு செய்துள்ளார்.
துாமகேது வால்நட்சத்திரத்தை ஆங்கிலத்தில் ஹலே வால் நட்சத்திரம் என்பர். 1743ல் இதை பார்த்து தான் புதுச்சேரி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஆனால் 1910ல் ஆண்டு தோன்றிய இதே துாமகேதுவை புதுச்சேரியில் வாழ்ந்த மகாகவி சுப்ரமணிய பாரதியார் பார்த்து, 'துாமகேதுச் சுடரே வாராய்! ஏழையர்க் கேதும் இடர் செயா தேநீ' என்று வரங்கேட்டு வரவேற்றுள்ளார் என்பது தனிக்கதை.