ADDED : டிச 30, 2024 05:17 AM
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் இயற்கை வாழ்வியல் முகாம் நடந்தது. யோகா மாணவர் மாரிமுத்து வரவேற்றார்.
மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் பேசுகையில், ''நவீன வாழ்க்கை எனும் போர்வையில் இயல்பான குணங்களை இழந்து வருகிறோம். உளவியல், உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு இதுவே அடிப்படை காரணம்'' என்றார். திருவண்ணாமலை மகிழாலயா இயற்கை மருத்துவமனை டாக்டர் ராஜலட்சுமி பேசுகையில், ''இயற்கை மருத்துவம் மூலம் உடல், மனம், ஆன்மாவுக்கான ஆரோக்கியத்தை பெற முடியும். இயற்கை சார்ந்த ஆரோக்கியமே மகிழ்ச்சி தரும்'' என்றார்.
சின்னமனுார் இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை நிறுவனர் செல்வகுமார் பேசுகையில், ''தமிழர்கள், நல்வாழ்வியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள். இயற்கை, மனித குலத்திற்கு தீங்கு ஏற்படாமல் அறிவியல் பூர்வமாக சிந்தித்து வளர்ச்சி நோக்கி பயணம் செய்தவர்கள்'' என்றார். மியூசிய அலுவலக உதவியாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார். செயலாளர் நந்தாராவ் ஏற்பாடுகளை செய்தார்.
மதுரைக் கல்லுாரி பேராசிரியர் மணிகண்டன், தமிழ்நாடு காந்தி நினைவு நிதி செயலாளர் ராஜேந்திரன், இயற்கை வாழ்வியல் அறிஞர் தேவதாஸ் காந்தி, யோகா மாணவர்கள், மியூசிய பணியாளர்கள் பங்கேற்றனர்.

