கவுஹாத்தி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தமிழக மாணவர்களுக்கு வழிகாட்டுமா அரசு?
கவுஹாத்தி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தமிழக மாணவர்களுக்கு வழிகாட்டுமா அரசு?
ADDED : நவ 09, 2024 10:19 PM
சென்னை:அசாம் மாநிலம், கவுஹாத்தி ஐ.ஐ.டி.,யில், வரும் 30ம் தேதி முதல் டிச., 3 வரை நடக்க உள்ள, சர்வதேச அறிவியல் மாநாட்டில், தமிழக மாணவர்கள் பங்கேற்கும் வகையில், தமிழக அரசு வழிகாட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சகமும், புவி அறிவியல் துறை அமைச்சகமும், விஞ்ஞான பாரதி அமைப்புடன் இணைந்து, அறிவியல் தொழில்நுட்பத்தில் சுயசார்பு என்ற அடிப்படை நோக்கில், நான்கு நாள் இந்திய சர்வதேச அறிவியல் மாநாட்டை நடத்துகின்றன.
இதில், உலக புகழ்பெற்ற விஞ்ஞானிகள், உள்நாட்டு கண்டுபிடிப்பாளர்கள் பங்கேற்பர்.
அறிவியல் சார்ந்த படைப்பாக்க நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த அறிவியல் ஆர்வம் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் பங்கேற்கும் வகையில், கல்வித் துறை வழிகாட்ட வேண்டும் என, அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துஉள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
வரும் 2047ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு இந்த மாநாட்டை நடத்துகிறது. இதில், இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, 'மிஷின் லேர்னிங், ரோபோட்டிக்ஸ்' உள்ளிட்ட, தற்கால வளரும் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கருத்துக்கள் விவாதிக்கப்படும்.
மேலும், வேளாண் தொழில்நுட்பம், மருத்துவம், சுகாதாரம், சுற்றுச்சூழல் அறிவியல், உயிரியல், நானோ தொழில்நுட்பம் மற்றும் அணு இயற்பியல் பற்றிய அமர்வுகளும் இடம்பெற உள்ளன.
அதனால், தமிழக மாணவர்களை அழைத்துச் செல்ல, தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி துறைகள் முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.