கபடியால் இணைந்திருப்போம்: போலந்து பயணத்தில் பிரதமர் மோடி உற்சாகம்
கபடியால் இணைந்திருப்போம்: போலந்து பயணத்தில் பிரதமர் மோடி உற்சாகம்
ADDED : ஆக 23, 2024 07:08 AM

வார்ஸா: 'இரு நாட்டு உறவுகள், கலாசார பரிமாற்றங்களில் விளையாட்டின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் இந்தியாவும் போலந்தும் கபடி விளையாட்டின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன' என பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி, ஐரோப்பிய நாடுகளான போலந்து மற்றும் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போலந்தில், அந்நாட்டு பிரதமர் டொனால்டு டஸ்க்கை நேற்று சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
போலந்து கபடி சம்மேளனத்தின் தலைவர் மைக்கேல், கபடி வாரிய உறுப்பினர் அன்னா கல்பர்சிக், கபடி வீரர்கள் ஆகியோரையும் மோடி சந்தித்தார். போலந்தில் கபடியை முன்னேற்றுவதற்கும், ஐரோப்பாவில் விளையாட்டை பிரபலப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.
கபடி சாம்பியன்ஷிப்
இந்தியா மற்றும் போலந்து இடையே இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவும், போலந்தும் கபடி விளையாட்டின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டு இந்தியா வழியாக போலந்தை அடைந்தது; அவர்கள் அதை பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து 2 ஆண்டுகள், ஐரோப்பிய கபடி சாம்பியன் பட்டத்தை போலந்து கைப்பற்றியுள்ளது.
முதல் முறையாக கபடி சாம்பியன்ஷிப் போட்டியையும் நடத்த உள்ளது. சிறப்பாக விளையாட போலந்து அணிக்கு வாழ்த்துக்கள். பாரதத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கபடி விளையாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியும். அதேபோன்ற நிலை, இங்கும் ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
காரணம் என்ன?
இந்தியாவில் நடக்கும் புரோ கபடி லீக் போட்டிகளில், போலந்து நாட்டை சேர்ந்த மைக்கேல், பெங்களூரு அணிக்காக 2 சீசன்கள் விளையாடினார். மற்றொரு வீரரான பமுலுக், 2023ம் ஆண்டில் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.
* கடந்த 2016ம் ஆண்டு இந்தியா நடத்திய கபடி உலகக் கோப்பையில் போலந்து அணி சிறப்பாக விளையாடி தூள் கிளப்பியது. 8 ஆண்டுக்கு முன் குஜராத்தின் ஆமதாபாத்தில் நடத்தப்பட்ட கபடி உலகக் கோப்பையில் ஈரானை போலந்து அணி தோற்கடித்தது.
* இதுவே, இந்தியாவும் போலந்தும் கபடி விளையாட்டின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன என பிரதமர் மோடி சொல்வதற்கு காரணம்.