PUBLISHED ON : ஏப் 26, 2026

கனவை துரத்தும் இரு தலைமுறை
மனதின் கேள்விகளுக்கு உரிய பதில் சொல்ல முடியாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இளைஞன்; கனவை எரித்துவிட்டு குடும்பத்திற்காக உழைத்து உருகும் குடும்பத்தலைவன்; இருவரும் தந்தை - மகன்; ஒருவரது மனம் மற்றொருவர் அறியாத சூழல்; இருவரின் வாழ்க்கை தரும் காட்சிகளே திரைக்கதை; 'தன் மீது காதல் கொண்டிருக்கும் தந்தை - மகன் இருவரில், யாரோடு கை குலுக்கியது சினிமா' என்பது கதை!
பெருமழைக்கு பின்பான குளிர் காற்று தரும் சந்தோஷத்தை உணர வைக்கின்றன அழகிய குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகள்; வழியாமல் இலையிலேயே தங்கிவிட்ட மழைத்துளி போல் குடும்பத்தலைவியின் குணம்!
அந்த இலையை அசைய வைக்கும் காற்றாய், மனைவியிடம் தன் முன்கதை சொல்லும் ஜெயராம்; இலை வடிக்கும் அந்த ஒரு துளியில் வைரமாய் மின்னுகிறது பெண்மை!
'விரும்பும் களத்திற்கு ஏற்றவாறு தன்னை கூர்தீட்டி வைத்திருப்பவன், அக்களம் தனக்கு கிடைக்கையில் என்னவாக வெளிப்படுவான்' என்பதைச் சொல்லும் ஒரு வாய்ப்பை ஜெயராமுக்கு தருகிறது திரைக்கதை; அக்காட்சியில், ஜெயராம் தன் நடிப்பில் ஜொலிப் பதற்காக, தன்னால் அந்நடிப்பை தர இயலாதது போல் நடித்திருக்கும் ஷராபுதீன், ஈரமாய் மனதில் தங்குகிறார்!
'வாரிசு அரசியல் பற்றி மட்டும் வக்கனையாய் பேசும் நாம், 'சினிமா வாரிசு' பற்றி பேசாமல் இருப்பது அசிங்கம்; அது, நல்ல கலைஞனுக்கு நாம் செய்யும் துரோகம்' என்று புரிய வைக்கிறது க்ளைமாக்ஸ். ஆனால், இதை நமக்கு உணர்த்த 'ஜெயராம் - காளிதாஸ் ஜெயராம்' பயன்பட்டிருப்பது நான்காம் நிலை புற்று!
காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடி இல்லை; ஜோடியாக உலவும் ஜெயராம் - ஆஷா சரத்துக்கு 'டூயட்' இல்லை; ஆனால், எல்லா காட்சிகளிலும் காதல் இழையோடுகிறது; குடும்பம் மீது காதல், கனவின் மீது காதல், கிடைத்த வாழ்வின் மீது காதல் கொண்டு உலவும் பாத்திரங்களால், படைப்பின் மீது நமக்கும் காதல் பிறக்கிறது.
'க்ளைமாக்ஸ்' நிறைகையில், மழை கழுவிய சாலையாய் நம் மனம்.
ஆக...
சிறந்த படத்திலும் இன்னும் சிறந்ததை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இது சுமாரான படம்

