PUBLISHED ON : அக் 04, 2026

'இவர் இங்கே' என்றுரைக்கும் 'முகவரி' அல்ல இது; 'இவர் இப்படி' என்றுரைக்கும் முகவரி!
ஆகாயம் அருந்தி வாழ்கிறேன்
இந்த வாரம்... 'வருமுன் காக்கும் வழி சொல்வதே என் தொழில் தர்மம்' என, 50 ஆண்டுகாலமாக 1,000ற்கும் மேற்பட்ட மருத்துவ விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதி வருபவர்; மருத்துவம் சார்ந்த 13 புத்தகங்களின் ஆசிரியர்; 'மருத்துவ எழுத்தாளர்' அடையாளத்தில், 2018ல் 'கலைமாமணி' விருது பெற்றவர்; 70 வயதில், பொது மற்றும் குடும்பநல மருத்துவம் சார்ந்து 45 ஆண்டுகால அனுபவத்துடன் இயங்கிவரும் சென்னை, டாக்டர் மேத்தா மருத்துவமனை மருத்துவர் ச.அமுதகுமார்.
*அனைத்து நோய்களையும் குணமாக்கும் உலகின் மிகச்சிறந்த மருந்து எது டாக்டர்?
தனக்கான தொந்தரவுகளை எந்த நோயாளியாலும் மிகத்துல்லியமா சொல்லிட முடியாது; அதேமாதிரி, 'நோய் குணமாகுற நாள் இது'ன்னு எந்த ஒரு மருத்துவராலும் துல்லியமா சொல்லவே முடியாது; பரஸ்பரம் இந்த புரிதல், எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்து!
*உங்களின் எந்த குணத்திற்கு உங்களால் இன்னும் சிகிச்சை தர இயலவில்லை?
எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்ப தவறு பண்றவங்க மேல வர்ற கோபம்! 'அவங்க ஏத்துக்கிட்டு திருத்திக்கிற மாதிரி நீ இன்னும் சொல்லலை'ன்னு அறிவுக்குப் புரியது; ப்ப்ச்ச்ச்... அந்த கோபத்துக்கு புரிய மாட்டேங்குது!
*இத்தனை ஆண்டு மருத்துவ பணியில் சந்திக்காத ஒரு சங்கடம்?
'நீங்க எழுதுறதை பின்பற்றி வாழ்ந்து சிரமப்படுறோம்'னோ, 'உங்க சிகிச்சைதான் எங்களோட இந்த நிலைமைக்கு காரணம்'னோ யாரும் கண்ணீர் விட்டதில்லை; கத்துக்கிட்டே இருக்குறேன்... உயிர்களுக்கு சிகிச்சை தர அந்த கடவுள் வாய்ப்பு தர்றார்!
*ஏதேனும் ஒரு நோயாளியை கடவுளாக உணர்ந்திருக்கிறீர்களா டாக்டர்?
'எனக்கு எதுக்குப்பா... நீ எடுத்துக்கோ'ன்னு சொல்ற உறவுன்னா, அது எல்லாருக்கும் அம்மாதான்; எனக்கு என் அம்மா வாசகமணி. இந்த சாமிக்கு அடுத்துன்னா, உடல் உறுப்புகளை தானம் பண்ண வர்ற எல்லாரையும் நான் தெய்வமாத்தான் உணர்றேன்!
*'எழுத்து என்ன செய்யும்' என்ற நம்பிக்கையில் இப்படி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?
'கல்வெட்டு' சொல்ற தகவலை கல்வெட்டுல பார்க்குறதுக்கும், அதை காகிதத்துல பார்க்குறதுக்கும், காட்சி ஊடகத்துல பார்க்குறதுக்கும் உள்ள வித்தியாசம்தான் என் பதில்; 'புற்றுநோய்'ன்னு எழுதி வாசிச்சு பாருங்க... பயம் வரும்... தற்காத்துக்கத் தோணும்!
*உங்களின் பேராசை என்ன டாக்டர்?
வாய்க்கு ருசி தெரியாத நேரத்துல, 'வைட்டமின் பி12, துத்தநாகம் சத்துல ஏதோ ஒண்ணு குறைஞ்சிருக்கு போல'ன்னு தமிழர்கள் சொல்லணும்; இந்த அறிவுக்கு, இணைய தகவல்கள் தாண்டி என் எழுத்துக்கள் காரணமா இருக்கணும்!
*'மொத்த வாழ்க்கைக்கும் இந்த ஒரு நொடி போதும்' என திருப்தியுற்ற தருணம்?
என் மகள் வர்ஷா பிறக்குறப்போ என் மனைவி மல்லிகா உயிருக்கு பிரச்னை; என் பேத்தி நற்பவி பிறக்குறப்போ என் மகளுக்கும் அதே பிரச்னை; இன்னைக்கு மனைவி, மகள், பேத்தியோட நான் வாழ்ற ஒவ்வொரு வினாடியும் ஊஞ்சல்ல ஆடுற சுகம்!
*'பணம்' என்பது நோயா... நோய் தீர்க்கும் மருந்தா?
இரண்டும்தான்; தினசரி சந்திக்கிற அனுபவத்துல சொல்றேன்... 'சிகிச்சைக்கு பணம் இல்லை'ங்கிற சூழல் நோயோட வீரியத்தை தீவிரமாக்குது; 'பணம் இருக்கு... பார்த்துக்கலாம்'ங்கிற நம்பிக்கை, மருந்துக்கு இணையான தோழனா நிற்குது!
*தாங்கள் நோயுறும் தருணங்களில் வீட்டில் என்னென்ன நிகழும்?
'நேரத்துக்கு சாப்பிடுங்கன்னு சொன்னா கேட்குறீங்களா'ன்னு குரல் எழும்பும்; கொஞ்ச நேரத்துலேயே, 'ஏங்க அவருக்கு உடம்பு முடியலையாம்... போன் வந்துச்சு; போயிட்டு வந்துடுங்க'ன்னு அன்பு உத்தரவும் வரும்!
*எழுத்தாளராக சொல்லுங்கள் டாக்டர்... நல்ல தலைவனுக்கான தகுதிகள் என்னென்ன?
சந்திக்கிற ஒவ்வொரு நிகழ்விலும் தனக்கான அனுபவத்தை கண்டுபிடிக்கத் தெரியணும்; கிடைக்கிற அனுபவத்தை நல்லதுக்காக பயன்படுத்த தெரியணும்; இது ரெண்டும் சாத்தியப்பட ஒழுக்கமானவனா வாழப் பழகி இருக்கணும்!
*சராசரி குடிமகனாக இச்சமூகத்தின் மீதான உங்களின் கோபம்?
கோபம் இல்லை; ஆனா, 'யாரை பின்பற்றணும்னு இந்த சமூகத்துக்கு தெளிவில்லையோ'ங்கிற ஆதங்கம் அதிகமா இருக்கு. 'வளர்ச்சிக்கும், வீக்கத்துக்கும் வித்தியாசம் அறியாத சிகிச்சை ஆபத்து'ன்னு உணர்ற என் மனசோட பெரிய வருத்தம் இது!
*உங்களை 'கடவுள்' என கையெடுத்து கும்பிடும் மனிதர்களிடம் என்ன சொல்கிறீர்கள்?
ஒவ்வொரு நல்ல உயிரும் இந்த உலகத்துல 'என்னமாதிரி வாழணும்'னு முயற்சி பண்ணுதோ, அப்படி நான் வாழ்ந்துட்டு இருக்கிறதா எனக்கு புரிய வைக்கிற 'வணக்கம்' அது; அதுக்கு 'நன்றி'தானே பதில் மரியாதை; நானும் 'நன்றி' சொல்றேன்.
*வாழும் போது 'மரணம்' பற்றிய சிந்தனை மனிதனுக்கு அவசியமா?
நிச்சயம் வேணும்; ஏன்னா, அது எதிர்மறை சிந்தனை இல்ல... எதிர்காலத்துக்கான சிந்தனை. 'அந்த தருணத்தை நாம சந்திக்கிறதுக்குள்ளே உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் இன்னும் நிறைய நல்லது செய்யணும்; 'பத்மஸ்ரீ' விருது வாங்கிரணும்'னு எனக்கும் நிறைய ஆசைகள் இருக்கு.
*உங்களின் இந்த பேட்டி யாருக்கு கசக்கும்; யாருக்கு இனிக்கும்?
'டாக்டர் அமுதகுமார் பற்றி நன்கு அறிவேன்'னு நினைச்சுட்டு இருக்குறவங்களுக்கு, என்னோட இந்த உணர்வுகள் ஆச்சரியமா இருக்கும்; இந்த ஆச்சரியமே அவங்களுக்கு இனிப்பா தெரியும். மற்றபடி, இதை 'கசப்பு'ன்னு சொல்ல எனக்கு தெரிஞ்சு ஆள் இல்லை!
*'அன்பு - நேர்மை'க்கு இனி மதிப்பு இருக்குமா டாக்டர்?
இந்த ரெண்டுக்குமான மதிப்பு, இதை கொடுக்குற மனசை வைச்சும், இதை கொண்டாடுற மனசை வைச்சும்தான் இருக்கு; ஆனா, ரெண்டுமே இப்போ குறைஞ்சுட்டு வருது. இனி இல்லாம போகப் போறதோட பெருமை பற்றி சிந்திக்கிறதே நேர விரயம்!
*'தமிழ்' - உங்கள் பார்வையில்?
அண்ணாந்து பார்க்க வைக்கும் ஆகாயம்.
