
இந்த போட்டோவுல கூட உம்முன்னு இருக்குற என் பேரு... சந்திரபோஸ். என் 47
வருஷ வாழ்க்கையில, என் குடும்பம் தவிர்த்து இந்த கணபதி சுந்தர
நாச்சியார்புரம்ல யாருமே என் சிரிப்பை பார்த்திருக்க மாட்டாங்க!
விருதுநகர், ராஜபாளையம் மாரியம்மன் கோவில் ஆட்டோ ஸ்டாண்டுல பத்து வருஷத்துக்கு மேல இருக்குற ஆட்டோக்காரன் நான்; இருந்தாலும், எனக்குன்னு நெருங்கிய நட்பு வட்டம் கிடையாது.
இப்படி சிரிக்க மறந்தவனா, நண்பர்கள் இல்லாதவனா நான் இருக்க காரணம் என் பால்ய பருவம்; அதைப்பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும்...
ஒரு நிலத்தகராறுல 10 ஏக்கர் நிலத்தை இழந்தவர் என் அப்பா. என்னோட ஒன்பது வயசுல அவர் இறந்துட்டார். அதுக்கப் புறம் என்னையும், இரண்டு சகோதரிகளையும் வளர்க்க என் அம்மா ரொம்பவே சிரமப்பட்டாங்க. படிப்புல முதல் மாணவனா இருந்தாலும், அம்மாவோட கஷ்டத்தை பார்க்கப் பொறுக்காம 10ம் வகுப்பு பாதியிலேயே சைக்கிளுக்கு 'பஞ்சர்' போட வந்துட்டேன்!
என் 20 வயசுல 30 வயசு ஆளுக மாதிரி முறுக்கிட்டு நிற்பேன். வெளியில போயிட்டு வர்ற என் வீட்டு பெண்களுக்கு, என்னோட இந்த முரட்டுத்தனம் தான் பாதுகாப்பு வேலி. பூர்வீக சொத்தை இழந்து சொந்த ஊர்ல அகதியா வாழ்ந்தது; வயசுக்கு மீறின பொறுப்புகள்... இதெல்லாம் தான் என் சிரிப்பை பறிச்சுக்கிட்டு மனசை இறுக்கமாக்கிருச்சு!
மகளை என் கையில கொடுத்துட்டு என் மனைவி இறந்தப்போதான் இறுகியிருந்த மனசுல வலியை உணர்ந்தேன்!
இப்பவும் ஊர் பார்வையில நான் சிரிக்கத் தெரியாத ஆள்; நண்பர்கள் இல்லாத மனுஷன். ஆனா, இதையெல்லாம் என் குடும்பத்துக்குள்ளே மட்டும் நான் அனுபவிக்கிறேன். நான் மறுமணம் பண்ணிக்கிட்ட சுமதி எனக்கு நல்ல தோழி. மூத்த மக கவுசல்யாவோட சேர்த்து சுபாஷினி, மகன் பார்த்த சாரதின்னு எனக்கு மூணு பிள்ளைங்க!
கவுசல்யா அவங்க பாட்டி வீட்ல இருக்குறா; சுபாஷினி ஈரோட்டுல தனியார் கல்லுாரி பொறியியல் மாணவி. 2024ம் வருஷம் அரசு பள்ளியில படிச்சு, சென்னை ஐ.ஐ.டி.,யில 'ஏரோஸ் பேஸ்' துறையில சேர்ந்த பார்த்த சாரதியை, நம்ம முதல்வர்ல இருந்து மாவட்ட ஆட்சியர் வரைக்கும் எல்லாரும் பாராட்டி னாங்க; ஆனா, சொந் த ஊர்ல அவன் வெற்றி யை பெருசா யாரும் கொண்டாடலை!
ஆச்சரியம் பாருங்க... இது எதையுமே அவன் பெருசா எடுத்துக்கலை; ஊர்ல எல்லார் கிட்டேயும் சகஜமா பழகுறான். 'இந்த விஷயத்துல அவன் என்னை மாதிரி இல்லை'ன்னு நினைக்கிறப்போ எனக்கு ரொம்ப சந்தோஷம். வட்டிக்கு கடன் வாங்கி, வாழ்க்கை படிக்கட்டுகள்ல பிள்ளைகளை ஏத்தி விட்டுட்டு இருக்குறேன். என் பிள்ளைங்க இப்போ மாதிரியே எப்பவும் சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே இருக்கணும் னு ஆசைப் படுறேன்.
சமீபத்துல என் பிள்ளைங்க என்கிட்டே இப்படி கேட்டாங்க ...
'உங்க வாழ்க்கையில இருந்து எங்களுக்கு ஒரு பாடம் சொல்றதா இருந்தா என்னப்பா சொல்வீங்க?'
'பலவீனங்களை பரஸ்பரம் மறைச்சுக்கிற உறவு ரொம்ப நாள் நீடிக்காது'ன்னு சொன்னேன்.
என் பதில் சரிதானே?

