தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/அன்புள்ள தன்னார்வலர்!

அன்புள்ள தன்னார்வலர்!

அன்புள்ள தன்னார்வலர்!


PUBLISHED ON : செப் 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உழைத்து களைத்து பூக்கிறேன்!

'நெருங்கிய உறவுகளால காயப்பட்ட மனசு இன்னொரு மனிதரை நேசிக்கிறதுக்கான சக்தியை இழந்திரும்'னு சொல்றது பொய்; ஏன்னா, அப்படியான காயங்கள்ல இருந்து மீண்டுதான் இப்போ நான் இந்த வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்குறேன்!

நான் சங்கர் கணேஷ்; வயசு 52 ஆயிருச்சு; விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வாழ்விடம்.

இனிப்பு கசந்தது

பத்தாம் வகுப்போட படிப்பை நிறுத்தவேண்டிய குடும்ப சூழல். மதுரை மீனாட்சி பஜார்ல மூணு மாசம் வேலை பார்த்தேன். அப்புறம், அங்கிருந்து பொருட்கள் வாங்கி வந்து ராஜபாளையத்துல கடை போட்டேன். திருமணம் கைகூடுச்சு; இரண்டு குழந்தைகள் பிறந்தாங்க. ப்ப்ச்ச்ச்... 2005க்கு அப்புறம் திருமண வாழ்க்கையில கசப்பு; பிரிஞ்சுட்டோம்!

தனிமை என்னை தவறான பாதைக்கு கூட்டிட்டுப் போயிடக் கூடாதுன்னு, சமூக சேவையில நான் ஈடுபட ஆரம்பிச்சேன். எங்க பகுதியில நகை ஆசாரி குடும்பங்கள் அதிகம். அவங்க வீட்டு விசேஷங்கள்ல நானா வலியப்போய் வேலைகள் பார்த்தேன்.

இதைப்பார்த்த கஜேந்திரன் ஆசாரி, 'இந்த பண்புக்கு நீ இங்கே இருக்கக்கூடாது'ன்னு சொல்லி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்துக்கு அனுப்பி வைச்சார்!

சேவை மொழி

'தன்னார்வலர்கள் எப்படி செயல்படணும்'னு அங்கேதான் நான் கத்துக்கிட்டேன். அப்படியே காந்திய கொள்கைகள் மேல பிடிப்பு ஏற்பட்டு, மதுரை காந்தி அருங்காட்சியக நிகழ்ச்சிகள்ல உணவு பரிமாற ஆரம்பிச்சேன்!

அங்கே அறிமுகமான நண்பர், '4,000 விவசாயிகள் கலந்துக்குற 'ஹரியானா - டில்லி' நடை பயணத்துக்கு தன்னார்வலர் தேவை'ன்னு அழைச்சிட்டுப் போனார்.

ஒருத்தர் சாப்பிடுறப்போ அவர் எதை விரும்புறார்னு கவனிச்சு, அடுத்ததடவை அதை அவருக்கு அதிகமா பரிமாறினேன். 'எங்க மொழி புரியாமலேயே எங்க தேவையை நீ சரியா புரிஞ்சுக் கிட்டே'ன்னு நடைபயணத்துக்கு வந்திருந்த விவசாயி என்னைப் பாராட்டினார்.

இதேமாதிரி தான் , கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா பணிகள்லேயும் நல்ல அனுபவம் கிடைச்சது.

அர்த்தமுள்ள வாழ்வு

'மனசை கட்டுக்கோப்பா வைச்சுக்க இதெல்லாம் பத்துமா சங்கரு'ன்னு மனசு கேட்டதால, உள்ளூர் விளக்கு பூஜை, மாதர் சங்க மாநாடுகள், மருத்துவ முகாம்கள், சமூக விழிப்புணர்வு ஊர்வலங்கள்ல ஒருங்கிணைப்பு வேலை பார்க்குறேன்!

இப்படி உடல் வருத்தி மனசு பூக்குற அளவுக்கு வாழ்றதால, மனசுல உறவுகள் தந்த எந்த வலிகளும் இல்லை; எப்படி இருக்கும்... நான்தான் அந்த வலி வன்மமா மாற அனுமதிக்கவே இல்லையே!

'எல்லார் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்'னு எனக்கு புரிஞ்சிருச்சு; இதனால, என் வாழ்க்கை நிம்மதியா போயிட்டு இருக்கு!

இந்த சங்கர் கணேஷிற்கு, விவசாயிகள், கால்நடைகளுக்கு சேவை புரிந்தமைக்காக, 2024ம் ஆண்டில் பதக்கம் வழங்கி கவுரவித்து இருக்கிறார் மாவட்ட ஆட்சியர்.

இவரிடம் பேச 94424 79611

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us