PUBLISHED ON : நவ 22, 2026

நோய் கொல்லும் ஓலை
'ஈரோடு, பொன்னாண்டவலசு கிராமத்தாருக்கு மட்டுமே 'நெல் விவசாயி' ஆக
அறியப்பட்டவன் நான்; நீண்டகாலமா பாதுகாத்து வந்த சித்த மருத்துவ
குறிப்புகள் அடங்கிய அரிய ஓலைச்சுவடி பொக்கிஷத்தை மத்திய சித்த மருத்துவ
ஆராய்ச்சி குழுமத்திடம் ஒப்படைச்சதால, இன்னைக்கு தமிழகம் முழுக்க நான்
பரிச்சயப்பட்ட ஆள்!'
யார் குரல்?
பெயர்: ரா.ஜெகநாதன்
வயது: 58
அடையாளம்: பொதுநலவாதி
சித்த மருத்துவத்துக்கும் விவசாயி ஜெகநாதனுக்குமான தொடர்பு?
அடிப்படையில விவசாய குடும்பத்து ஆள் நான்; அப்பாவோட மாமனாரான என் அப்புச்சியும், அவர் மகனான என் தாய்மாமா பழனிசாமியும் சித்த வைத்தியம் பண்ணி இருக்காங்க! இந்த தொடர்பைத் தவிர சித்த மருத்துவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஓலைச்சுவடிகள் பற்றி...
அப்புச்சி கொடுத்துட்டு போன இது என் வீட்டுல இருக்குன்னு, என் அப்பா ராமசாமி மூலமா 50 வருஷத்துக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். ஒன்றரை ஆண்டுக்கு முன்னாடி அப்பா இறந்ததும், ஓலைச்சுவடிகளை எடுத்துப் பார்க்கணும்னு தோணுச்சு.
இரும்பு பெட்டிக்குள்ளே கரையான் அரிச்சது போக, மிச்சமிருந்த சுவடி கட்டெடுத்து பிரிச்சு வாசிச்சுப் பார்த்தேன். மாமா தந்த பயிற்சியால ஓலைச்சுவடியோட 'சங்கேத தமிழ்' எனக்கு ஓரளவு புரியும்!
மூலிகைகளை பற்றி நேரடியா சொல்லாம மறைமுகமா சொல்ற அந்த குறிப்புகள் மூலமா, சித்த மருத்துவம் சார்ந்த அரிய செந்துார பஸ்ப வகைகள் பற்றிய குறிப்புகள் அதுல இருக்குறதை தெரிஞ்சுக் கிட்டேன். வியாதிகளை கண்டு பிடிக்கிற 'நாடிபிடி' முறைகள் பற்றிய நுண்ணிய வரைபடமும் அதுல இருந்தது.
இது புரிஞ்சதும், 'இது நம்ம மக்களுக்கு பயன்படணும்'ங்கிற முடிவுக்கு வந்துட்டேன்.
ஓலைச்சுவடி ஒப்படைப்பு நிகழ்விற்கு முன்னும், பின்னும்...
'ஆயிரத்திற்கும் மேலான வியாதிகளுக்கு, பல நுாறு ஆண்டு களுக்கு முந்தைய சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் அடங்கிய பொக்கிஷம் இது'ன்னு உறுதி ஆனதுமே... செப்டம்பர் 11ம் தேதி மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழும அலுவலர் மாணிக்கவாசகம் தலைமை யிலான குழு சென்னையிலிருந்து வந்தாங்க; பெரும் சந்தோஷத் தோட அந்த ஓலைச்சுவடிகளை ஒப்படைச்சேன். அன்னைக்கு ராத்திரி ரொம்பவே நிம்மதியா துாங்கினேன்.
இந்த ஓலைச்சுவடிகளை வைச்சு காசு சம்பாதிக்கணும்னு தோணலையா?
நெல், மரவள்ளி கிழங்கு, கரும்பு, வாழை, மஞ்சள், பவானி ரக நெல்லுன்னு ஏகபோகமா விவசாயம் செஞ்சிருக்கேன்; என் ரெண்டு மகன்களும் நல்ல உத்தியோகத்துல இருக்குறாங்க; எனக்கு எதுக்கு இந்த சம்பாத்தியம்; இந்த ஓலைச்சுவடிகளோட குறிப்புகள் மக்களுக்கு பயன் பட்டா என் முன்னோர்கள் ஆன்மா சந்தோஷப்படும்; அதுபோதும் எனக்கு!
கடந்த வாரம், 'பாராட்டு சான்றிதழ்' தந்து ஜெகநாதனை கவுரவப்படுத்தி இருக்கிறது மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம்.
குரல் சொல்லும் குறள்
குறள்: 211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு
பொருள்: இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்; மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை!
ரா.ஜெகநாதன்
94424 28864
