PUBLISHED ON : ஜூலை 12, 2026

சொல்லாத காதல் சுகம் தருமா?
நாளை சென்னையில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இதயா இன்று அமெரிக்காவில் இருப்பது ஏன்; விமானத்தில் சந்திப்பவரிடம் தனது 'ஒருதலை காதல்' அத்தியாயங்களை இதயா விவரிப்பதால் நிகழ்வது என்ன; பள்ளி மற்றும் கல்லுாரி காலங்களில் இதயா சொல்லத்தவறிய காதல்கள் அவனை என்னென்ன செய்கின்றன?
'அந்த காலத்துல நாங்கெல்லாம்' என்கிற தொனியில் துவங்கும் கதை, இறுதிவரை ' இந்த காலத்துக்கு ஏற்றவகையில் எதையும் சொல்லவில்லை' என்பது குறை. காதலை சொல்வதில் நாயகனுக்கு இருக்கும் சிக்கல் குறித்து அழுத்தமாய் அலசாது, 'அவன் அப்படித்தான்' என்று கடந்து செல்வது ஏமாற்றம் தருகி றது.
'தோனியோட ' வின்னிங் ஷாட்'டை எல்லாரும் 'டிவி'யில பார்த்தாங்க; அதை நான் அவ கண்ணுல பார்த்தேன்' உள்ளிட்ட ரமணகிரிவாசனின் 'கியூட்' வசனங்கள், மனோஜ் பரமஹம்சா மற்றும் சி.ஹெச்.சாயின் அழகான ஒளிப்பதிவு, தமனின் துள்ளல் இசை, பல்லவி சிங் மற்றும் மீனாட்சியின் 90 ஸ் காலத்து ஆடை வடிவமைப்பு அனைத்தும், ரசிகர்களிடம் உண்டான மேற்படி ஏமாற்றத்தை குறைக்க உதவுகின்றன!
காதலில் விழுந்த இதயத்தின் பாரத்தை கண்களில் கடத்தும் வித்தை அதர்வாவுக்கு சீக்கிரம் கைவந்தால் நல்லது. காதல் உணர்வைத் துாண்டுவதற்கு ஏற்ற முகங்களாக ப்ரீத்தி முகுந்தன், கயாது லோஹர் நிறைவு தருகின்றனர். படத்தில் இன்னும் சில காதல் ஜோடிகள் இருப்பினும் யார் ஒருவரின் காதலிலும் அழுத்தமில்லை. 'ஒருதலை காதல்' கதையை இயக்கியுள்ள ஆகாஷ் பாஸ்கரன் காதலைப் பற்றி சொல்ல முயன்றதில் தெளிவில்லை!
இளையராஜாவின் 'பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா...' ஒலிக்கும் ரயில் நிலைய காட்சியிலும், 'காலேஜ் படிக்கிறப்போ, உன் மேல எனக்கு லவ் இருந்துச்சு இதயா' என்று பெண் மனம் ரகசியம் அவிழ்க்கும் இடத்திலுமே, 'காதல் கதை' பார்க்க வந்தது நினைவிற்கு வருகிறது.
'பொழுது போக்கு' தடத்தில் இருந்து பிறழாத போதும், இப்படைப்பில் 'காதல்' ருசிக்கான உப்பு குறைவு.
எதையும் ருசிக்கும் மனம் இருப்பின் ரசிக்கலாம்.
ஆக...
தழும்பை தடவி காதல் தந்த காயம் ரசிக்க விரும்பும் மனங்களை நகத்தால் கீறி விடுகிறான் இதயம் முரளி
