PUBLISHED ON : ஆக 30, 2026

திருச்சி, புத்துாரில் உள்ள பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயில்கின்றனர் கோ.பூஜனா, வெ.பத்ம வாணிஸ்ரீ; தமிழகத்தில் இருந்து தேசிய வில்வித்தை களத்திற்கு சென்றிருக்கும் 'பார்வை சவால்' வீராங்கனையர் இவர்கள் மட்டுமே!
பூஜனா: என் ஊரு ஈரோடு. மகாபாரத வீரன் அர்ஜுனனும், குரு துரோணரும், ஏகலைவனும் தான் வில் வித்தை மேல எனக்கு ஆர்வம் வர காரணம்! இன்னைக்கு நான் 'வில்வித்தை வீராங்கனை'ங்கிறது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம்!
பத்ம வாணிஸ்ரீ: கிருஷ்ணகிரி வீட்டுல என் தம்பியோட உண்டிவில் விளையாடுறப்போ, 'வில்லும் இப்படித்தான் இருக்குமோ'ன்னு நான் நினைச்சிருக்கேன். முதன்முறையா அதை தொட்டுப் பார்த்தப்போ அப்படி ஒரு சந்தோஷம்!
'பார்வை சவால் கொண்ட பெண் குழந்தைகளை சிறந்த வில்வித்தை வீராங்கனையராக உருவாக்க வேண்டும்' எனும் லட்சியத்துடன், ஓராண்டாக இவர்களுக்கு சிறப்பு பயிற்சியை அளித்து வருகிறார் பயிற்சியாளர் ராஜதுரை.
பூஜனா: 'எனக்கு பறவையின் கண்களே தெரிகின்றன'ன்னு துரோணர்கிட்டே அர்ஜுனன் சொன்னதைத்தான், ஒவ்வொரு வில்வித்தை களத்துலேயும் நான் நினைச்சுக்குறேன்.
அர்ஜுனன் மாதிரி ஜெயிக்க வலுவான தசைகள், வளையாத தண்டுவடம், சாயாத தலை, நிதானமான உள்மூச்சு/ வெளிமூச்சு, நடுங்காத கைவிரல்கள், காற்று வீசும் திசை கணிப்பு இதெல்லாம் ரொம்ப ரொம்ப அவசியம்னு நம்புறேன்!
பத்ம வாணிஸ்ரீ: இந்த திறனுக்காக நாள் தவறாம உடற்பயிற்சியும் யோகாவும் பண்றோம்; சத்தான உணவுகள் சாப்பிடுறோம். 'ரீகர்வ் போவ், காம்பவுண்டு போவ், இந்தியன் போவ்' வில்கள்ல, எடை அதிகமான 'இந்தியன் போவ்' தான் எங்க சாய்ஸ்; வில் கனமா இருந்தாதான், 40 வினாடி அவகாசத்துல வைக்கப்படுற குறி தப்பவே தப்பாது!
கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாபில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், நான்காம் இடம் பிடித்திருக்கிறார் பூஜனா; பத்ம வாணிஸ்ரீக்கு ஆறாவது இடம். இந்த செப்டம்பரில் ஆமதாபாத்தில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிக்கும் பூஜனா தேர்வாகி இருக்கிறார்.
பூஜனா: இந்த வில்வித்தை நிறைய பாடங்களை எங்களுக்கு கத்துக் கொடுத்திருக்கு. 'வாழ்க்கையில என்னை மாதிரி வளைஞ்சு கொடு; ஆனா, உடைஞ்சிராதே'ங்கிறது முதன்மை பாடம். 'எந்த அளவுக்கு பிரச்னைகளை உன்பக்கம் நீ இழுத்து யோசிக்கிறியோ, அந்தளவுக்கு இலக்கு நோக்கி பறக்குற அம்பு மாதிரி உனக்கு தீர்வு கிடைக்கும்!' - இது, இரண்டாவது பாடம்.
பத்ம வாணிஸ்ரீ: நம் அம்பில் இருக்குற விரல்களை, எய்யுற நேரத்துல லாவகமா விலக்குற நுட்பம் வில்வித்தையில ரொம்ப முக்கியம்.'தனக்குன்னு ஒரு இலக்கு, கனவோட இருக்குற எந்த உறவையும், அது எவ்வளவு நெருக்கமா இருந்தாலும் விலகிப் போக அனுமதிக்கணும்'னு எங்களுக்கு கற்றுக்கொடுத்தது இந்த திறன்தான்.
'கில்லி'களின் கனவு
'பார்வை சவால் உள்ள பெண்கள் வில்வித்தை களத்திற்குள் அதிகமாய் வர நாங்கள் காரணமாக வேண்டும்!'
