PUBLISHED ON : செப் 13, 2026

கடல் அன்னையை கொண்டாடும் மண்டாடி
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போல் கடலின் பாய்மரப் படகு போட்டி முகவைபட்டினம் கிராமத்தின் அடையாளம். இதில், புகை கக்கும் எரிமலையாக 'மண்டாடி - சம்மாட்டி' வகையறாக்கள் இடையிலான பகை. 'குரு - சிஷ்யன்' பாசம், நட்பில் துரோகம், காதலில் ஏமாற்றம், குற்றவுணர்வு உள்ளிட்ட விஷயங்களை விளையாட்டின் வழி கதையாடலாக்கி இருக்கிறது திரைக்கதை!
காற்றின் திசை, வேகம், அலைகள், நீரோட்டம் உள்ளிட்டவற்றை கணித்து, பாய்மரப் படகை கரை சேர்க்கும் விளையாட்டு; இதனை, மனதிற்கு இத்தனை நெருக்கமாய் இதற்குமுன் வெள்ளித்திரை காட்டியதில்லை!
பாய்மரப் படகில் உள்ள பாகங்கள் பற்றி தெளிவாக விளக்கி, கடல் சாகசங்களுடன் அசல் போட்டியை கண்டு ரசித்த உணர்வை வழங்கிய படக்குழுவுக்கு பாராட்டுகள். கடலின் நீர் சுழிக்குள் இருந்து படகை மீட்கும் காட்சி தொழில்நுட்ப உதவியுடன் மிரட்டுகிறது!
இப்பாராட்டில் பாதி பங்கு ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிருக்கு சேரும்; மிச்சத்தில் பாதி, பின்னணி இசையில் ஆர்ப்பரித்த ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு சொந்தம்; இப்போட்டி கற்பிக்கும் இயற்கை குறித்த அறிவு, கடல் மீது மீனவனுக்கு உள்ள உரிமை என, கதையில் அரசியல் பேசி கவரும் இயக்குனர் மதிமாறன் புகழேந்திக்கு மிச்ச சொச்ச பாராட்டு மொத்தமும்!
தடித்து கறுத்த தோலில் முகவை மைந்தனாகவே தெரிகிறார் சூரி. கதாநாயகனாக நடிக்கத் துவங்கிய பிறகு 'வெள்ளந்தி' குணம் பூசிய பாத்திரங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துவந்த சூரி, இதில் அவ்வளையத்தில் இருந்து வெளியேறி சாதித்திருக்கிறார். காதல் காட்சிகளில் மட்டும் இன்னும் மெருகேறிவிட்டால் இன்னுமொரு 'எஸ்கே' தயார்!
பாய்மரப் படகு போட்டி கொடுக்கும் உணர்ச்சிப் பெருக்கு கதையின் சம்பவங்களில் இல்லாததால், மண்டாடிகளின் வெற்றியை நம் வெற்றியாக கொண்டாட முடியவில்லை. இதனால், உயரப் பறந்திருக்க வேண்டிய மண்டாடியின் கொடி அரைக்கம்பத்தில் படபடக்கிறது.
ஆனாலும், புதுவித காட்சி அனுபவங்களால் அலையில் கால் நனைத்த திருப்தி கிடைக்கிறது.
ஆக...
'இவரது அடுத்த படம் என்ன' என்று கேட்க வைத்து ஜெயித்து விட்டீர்கள் சூரி
