PUBLISHED ON : ஜூன் 07, 2026

அரசப்பட்டியும் ஆண்பாவமும்
'நீ மட்டும் எங்கம்மாவை கல்யாணம் பண்ணிக்கலாம்; நான் உங்கம்மாவை கல்யாணம்
பண்ணிக்க கூடாதா'ன்னு சின்னவன் என்கிட்டே விவரமா கேட்டுட்டு ஓடுறான்;
அவன்கூட பொறந்தவன்தானடா நீ?
அப்பா... திட்டாதப்பா; பொண்ணு பார்க்கப் போன இடத்துல அந்த அரசப்பட்டி பொண்ணு என்கிட்டே என்ன கேட்டுச்சுன்னு தெரியுமா?
ஏலேய்... அப்படி என்னடா கேட்டுட்டா... 'காவல்'ங்கிறதுக்கு அர்த்தம் என்னன்னு கேட்டிருக்கா!
'ஆமா... தப்பு செஞ்சவனை உடனடியா கைது பண்றதும், தாமதம் இல்லாம குற்றப்பத்திரிகை தாக்கல் பண்றதும், அவனுக்கு கடும் தண்டனை வாங்கித் தர்றதும்தான் காவல்'னு சொன்னேன்; இதுல என்ன தப்பு?
என்ன தப்பா... இப்படி பதில் சொன்னதுக்கு பதிலா அரசப்பட்டி பாழும் கிணத்துல குதிச்சிருக்கலாம்டா நீ; ஏன்டா... தவறு நடக்காம தடுக்குறதுக்குப் பேரு காவலா... இல்ல, பயிரை மேய்ஞ்ச ஆடு, மாடுக்கு தண்டனை தர்றதுக்கு பேரு காவலா; 'வேலி'க்கான அர்த்தம் என்னன்னே உனக்கு தெரியலையேடா! இதுல, நம்ம முதல்வர் திருச்சியில பேசுனதை 300 தடவைக்கு மேல கேட்டிருக்கே நீ!
சும்மா என்னை திட்டாதப்பா... 'மக்கள்கிட்டே அரசியல் விழிப்புணர்வு வந்திருச்சு; அவங்களை யாரும் ஏமாத்த முடியாதுன்னு முதல்வர் சொன்னமாதிரி, உன்கிட்டேயும் அரசியல் விழிப்புணர்வு இருக்கு'ன்னு அவ என்னை பாராட்டுனா தெரியுமா?
அட மூதேவி... அவ உன்னை கலாய்ச்சிருக்காடா; 'ஆறு மாசம் ஆட்சி நிர்வாகத்தை விமர்சிக்க மாட்டோம்னு சொன்னவங்களால, ஆறு நாள் கூட அமைதியா இருக்க முடியலை'ன்னு நம்ம முதல்வர் பேசுனதுக்கு அவகிட்டே நீ என்னடா அர்த்தம் சொன்னே?
'பொறாமையில அவங்க பேசுறதை முதல்வர் கண்டுபிடிச்சிட்டார்'னு சொன்னேன்!
யம்மா... கேட்டியா; 'ஆறு நாள்கூட பொறுமையா இருக்க முடியாத அளவுக்கு குற்றங்கள் நடக்குது'ன்னு உன் பேரனுக்கு தோணலை பாரு!
சரிடா... இருக்கட்டும்; இந்த சின்ன விஷயத்துக்காக என் பேரனை எப்படிடா அந்த சிறுக்கி 'தற்குறி'ன்னு சொல்லலாம்?
சுத்தம்... யம்மா... உன் பேரனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆயிரும்.
