PUBLISHED ON : அக் 18, 2026

மதிப்பு கேட்கும் முக்கனி
புதுக்கோட்டை, கீரமங்கலத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவிலும், வங்க
கடற்கரையில் இருந்து கிழக்கே 25 கி.மீ., தொலைவிலும் உள்ளது சேந்தன்குடி
கிராமம். 400க்கும் மேலான குடும்பங்கள் வசிக்கும் இவ்வூரின் மண்வளத்தால்,
இங்கு முக்கனி மரங்கள் இல்லாத வீடுகள் அரிது!
தமிழக 'டெல்டா'
மாவட்டங்களில் 2018ல் தாண்டவமாடிய 'கஜா' புயல், இங்கே 10 ஆயிரத்திற்கும்
அதிகமான தென்னை மரங்களோடு ஊரின் அடையாளமாய் ஓங்கி உயர்ந்திருந்த பல மரங்களை
வேரோடு சாய்த்திருக்கிறது. இன்று, விவசாயிகளின் உழைப்பால் ஊர் முழுக்க
தென்னைகளின் தென்றல்!
வணக்கங்க...
நான் சேந்தன்குடி கிராமத்து பெரியாத்தாள் ஊருணி.
அம்புலி ஆறு உபரி நீர், அன்னதான காவிரி கால்வாய் மூலமா வந்து என்னை நிரப்பிட்டு இருந்தது. சமீபகாலமா, நான் வறண்டுபோய் கிடக்குறேன். என் வண்டல் மண்ணை விவசா யிகள் பயன்படுத்திக்கலாம்னு நம்ம அரசு அனுமதி கொடுத்திருக்கு; ஆனா, 'அது விவசாய நிலத்துக்குப் போகுதா, செங்கல் சூளைகளுக்கு போகுதா'ன்னு அரசு கண்காணிக்கணும்!
எங்க ஊரு இளசுகள்!
'ஒருகாலத்துல நெல் உற்பத்தியை மட்டுமே சார்ந்திருந்த ஊர் இது. காலமாற்றத்தை புரிஞ்சுக்கிட்டு மலைகள்ல மட்டுமே விளைஞ்சுட்டு இருந்த மிளகை சமவெளியில விளைவிச்சு, விவசாயத்துல ஒரு புரட்சி பண்ணினோம். ஆனா எங்க பயலுக, விவசாயத்துல கொஞ்சம் சுணக்கம் காட்டுறாங்க!' - குமுறும் இந்த ஊரின் பெரியவர்கள் அரசிடம் வைக்கும் கோரிக்கை...
'எலுமிச்சை, மிளகு, பலா, வாழை, அன்னாசின்னு எங்க மண்ணுல விளைச்சலுக்கு குறையில்லை; இதையெல்லாம் மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துற தொழிற்சாலைகளை எங்க கீரமங்கலத்துல அமைச்சு கொடுங்களேன்!'
