
எல்லாரும் இருந்தும் என்னவோ இல்லை
தேச பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்தை பிரதியெடுத்து லாபம் பார்க்கிறது மத்திய அமைச்சரின் மகன் நிறுவனம். இதனை அம்பலமாக்க முனையும் அரசின் அறிவியல் ஆலோசகர் டேனியல் ஜேம்ஸ் மீது, 'தேச விரோத முத்திரை' குத்தப்படுகிறது. இதனைக் கடந்து தன் தேசபக்தியை டேனியல் நிரூபிக்கும் கதை!
இணையம் மூலம் ஸ்மார்ட்போன், கணினி, 'சிசிடிவி' வழி எவர் ஒருவரின் அசைவையும் கண்காணிப்பதால் விளையும் விபரீதங்கள் பற்றி பேசியிருக்கிறார் இயக்குனர் மகேஷ் நாராயணன். பொதுத்துறைகள் சுருங்கி தனியார் மயத்தின் எல்லை விரிவடையும் இக்காலத்தில், நம்மைப் பற்றிய தரவுகள் சந்தைப் பொருளாக மாறும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு வழங்கியிருக்கிறார்.
இந்த சுவாரஸ்ய கதையை, 'தேச விரோத முத்திரை' குத்தப்பட்ட டேனியலாக வரும் மம்மூட்டி வழி சொல்லியதில்தான் சறுக்கல். இந்தியாவில் இருந்து லண்டன் தப்பிச் செல்வது, அங்கிருந்து வேறொரு தேசம், மீண்டும் இந்தியா என இருப்பிட மாற்றங்களுக்கு இடையில் அவர் செய்யும் காரியங்கள் எதிலும் வீரியம் இல்லை.
இருப்பினும், அமைச்சர் மகன் செய்யும் முறைகேடுகள் பற்றி டேனியல் வெளியிடும் 114 வீடியோக்கள் அரசிடம் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாமலா இருக்கும்; டேனியல் செய்யும் எந்த ஒரு செயலும் நமக்கு புரியும்படி இல்லாது, அவருக்கு மட்டுமே புரிகின்ற வகையில் இருப்பதும் ஏனோ?
பகத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா என முன்னணி நட்சத்திரங்கள் வரிசைக் கட்டினாலும், 'இதற்கு ஏன் இவர்கள்' என்கிற கேள்வி எழுகிறது. மம்மூட்டிக்கு உதவும் தோழனாக மோகன்லால் வரும்போது மட்டும் இக்கேள்வி எழவில்லை!
'ஆப்பரேஷன் சக்சஸ்; ஆனா, பேஷன்டை காப்பாத்த முடியலை' என்பதுபோல, 'மம்மூட்டி - மோகன்லால் காம்போ நல்லாயிருக்கு; ஆனா படம்...' என்றே பெருமூச்சி விட வேண்டியிருக்கிறது.
ஆக...
'மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி' என்பதாக இருக்கிறது 'தமிழ் - மலையாள' சினிமா ரசிகர்களின் நிலைமை

