PUBLISHED ON : ஏப் 05, 2026

தந்தை மடியில் தலைசாய்க்கும் சுகம்
எல்லோரிடமும் ஒரு நியாயம் இருக்கையில் நம் துன்பத்திற்கு காரணமாய் யாரை நோக்கி கை நீட்டுவது; இருக்கவே இருக்கிறார்... கடவுள்! இங்கே ஒருவன் அப்படி தவறான ' விரல்' நீட்டிவிட, பெருங் கோபம் கொண்ட கடவுள் மூன்று சாக்லேட்டுகளுடன் அவனிடம் வந்துவிடுகிறார். அவை யாருக்கு... எதற்கு?
முதலாவது சாக்லேட் உறை பிரிக்கப்படும் முன்... திறந்த வெளியில் சில குழந்தை களும் கடவுளும் கொஞ்சி விளையாடுகின்றனர்; 'அம்மாவை பார்க்க வந்தாயா...' என மழைத் துளிகளை மண் அணைப்பது போல், அந்த கொஞ்சலில் ததும்புகிறது ரம்மியம்; 'யோசிக்காம சாப்பிடும்மா... குணமாயிடுவே' - முதல் சாக்லேட் அந்த உதடு தொடுகையில் இப்படி வாழ்த்த தோன்றுகிறது.
இரண்டாவது சாக்லேட் உறை பிரிக்கையில்... அதை சாய்ஜுவின் சட்டைப்பையில் இருந்து கடவுள் எடுத்தது நினைவிற்கு வருகிறது; கண்ணீர் நிரம்பி கண்கள் பளபளக்க 'க்ளை மாக்ஸ்' ரசிக்கையிலும் இதே ஞாபகம். 'தன் எழுத்து, இயக்கத்தை 'கடவுள்' பெயரில் மாற்றி எழுதிய இயக்குனர் பெபி ஜார்ஜின் நேர்மைக்கு, கடவுள் தந்த சிறந்த பரிசு இவ்வெற்றி' என்பது அழுத்தமாய் புரிகிறது.
இந்த சாக்லேட் அந்த குட்டி உதடு தொடுகையில், 'நீ பிழைச்சிருவே செல்லம்' என்று அள்ளி அணைத்துக் கொள்ளும் ஆசை வருகிறது. மூன்றாவது சாக்லேட் மீண்டும் சாய்ஜுவின் சட்டைப்பையில்; அது அங்கு வருவதற்கு காரணமாகும் காட்சிகள் அத்தனையும், பயணத்தில் நம் கூடவே வரும் நிலவு போல் அழகு; இடையிடையே வரும் கடவுளின் சிரிப்பு பேரழகு.
கடவுளாக சன்னி வேய்ன்; ' விரல்' நீட்டிய சாய்ஜு குரூப், க்ளைமாக்ஸில் சன்னியை அணைத்து பொறாமை கொள்ள வைக்கிறார்; தந்தையை இழந்து கடவுளை தந்தையாக எண்ணி வாழ்பவன் மனம் இவ்விடம் உருகும்; தந்தையின் தோள் சாயும் மகள்களுக்கோ தந்தையிடம் கடவுளின் தரிசனம் கிடை க்கும்.
ஆக...
கடவுளை ஏப்ரல் 23 வரை நம்புபவனுக்கும் பிடிக்கும்; எப்போதும் நம்புபவனுக்கு ரொம்ப பிடிக்கும்.

