PUBLISHED ON : நவ 15, 2026

கடல் கழுவும் குருவி
கடலில் 'நெகிழி' ஒழிய முயற்சிக்கும் இத்தேவதையின் பணி, 'இவள் தந்தை இவளைப் பெறுவதற்கு என்ன புண்ணியம் செய்தாரோ' என்று காண்போரை நெகிழ வைக்கிறது.
இந்த வார...
சிலை: த.அ.தாரகை ஆராதனா
7ம் வகுப்பு மாணவி
சிற்பி: ச.பூ.அரவிந்த் தருண்ஸ்ரீ
ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர், சென்னை.
கருவறை: கடல்
அப்பா எனும் ஆசான்
கடல் மேல அப்பாவுக்கு பேரன்பு உண்டு. கடந்த 20 ஆண்டுகள்ல, 35 ஆயிரம் கிலோ 'நெகிழி' குப்பைகளை கடல்ல இருந்து அகற்றி இருக்கார். 'ஆழ்கடல் கிரிக்கெட், ஆழ்கடல் திருமணங்கள்' மூலமா அவர் செய்ற நெகிழியற்ற கடல்' விழிப்புணர்வுக்கு வரவேற்பு அதிகமா இருக்கு!
'காவல் துறையினருக்கு ஆழ்கடல் நீச்சல் பயிற்சி, பூம்புகார் தொல்லியல் ஆய்வுக்கு உதவி'னு இயங்கிட்டு இருக்குற அப்பா, மாற்றுத்திறனாளிகளை ஆழ்கடலுக்குள்ளே அழைச்சிட்டுப் போறதுக்கான 'பி.ஏ.டி.ஐ., - அடாப்டிவ் இன்ஸ்ட்ரக்டர்' உரிமம் வைச்சிருக்கார்; இந்த உரிமம் வைச்சு இருக்கிற ஒரே இந்தியர் இவர் மட்டும்தான்!
பி.ஏ.டி.ஐ., எனும் தொழில்முறை நீச்சல் பயிற்சியில் ஓபன் வாட்டர் டைவர், ஜூனியர் அட்வான்ஸ்டு ஓபன் வாட்டர் டைவர், எமர்ஜென்சி பர்ஸ்ட் ரெஸ்பாண்டர் மற்றும் ரெஸ்கியூ டைவர் உள்ளிட்ட நிலைகளில் தேர்ச்சி பெற்று, தற்போது 'பி.ஏ.டி.ஐ., ஜூனியர் மாஸ்டர்ஸ் ஸ்கூபா டைவர்' பயிற்சியில் இருக்கிறார், 12 வயது தாரகை ஆராதனா.
வலை தந்த கவலை
கடல் குப்பைகளில் மோசமானதுன்னா அது பேய் வலை; இந்த கைவிடப்பட்ட வலைகள்ல சிக்கி, குட்டி கடல் பசு இறந்ததை பார்த்தப்போ எனக்கு வயசு 5. 'கடலுக்குள்ளே இருக்குற குப்பை களை எடுத்தே ஆகணும்'னு அப்பாகிட்டே நான் உறுதியா சொன்னப்போ என் வயசு 8.
இதுவரைக்கும் அப்பாவும் நானும் சேர்ந்து, 'லிப்ட் பேக், போட், கிரேன்' உதவியோட 7,000 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை கடல்ல இருந்து அகற்றி இருக்கோம். எங்களோட இந்த வீடியோக்களை பார்த்து, என் வயதொத்த 40 தன்னார்வலர்கள் எங்களோட இணைஞ்சு
இருக்காங்க! 'நெகிழி இல்லா இந்தியா; நெகிழி அற்ற கடல்' எங்கள் இலக்கு!
கோவளம் - நீலாங்கரை இடையிலான 19 கி.மீ., தொலைவை ஏழு வயதில் நீந்தி கடந்தது...
ஒன்பது வயதில் தலை மன்னார் - தனுஷ்கோடி வரையிலான 30 கி.மீ., தொலைவை கடந்தது, 2025ல் ராமேஸ்வரம் கடலில் 20 அடி ஆழத்தில் இரண்டு நிமிடங்களுக்கு பரதம் ஆடியது உள்ளிட்ட தாரகை ஆராதனாவின் 'நெகிழி அற்ற கடல்' விழிப்புணர்வு முயற்சிகளில் பலவற்றை, 'வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகரித்துள்ளது.
பூம்புகார் கடல் அகழாய்வு பணிகளின்போது தந்தையுடன் கடலுக்குள் நீந்திச் சென்று, 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கப்பலை கண்டு ரசித்து வந்த அனுபவத்தில், 'தொல்லியல்' படிப்பின் மீது பேரார்வம் கொண்டுள்ளார் ஆராதனா.
உளியின் மொழி
'ஒரு சிட்டுக்குருவி காட்டுத்தீயை அணைக்க தன் அலகால் நீரெடுத்து வந்ததென ஆப்ரிக்க கதை ஒன்று உண்டு. அப்படியான சிட்டுக் குருவியாய் என் மகள்
தாரகை ஆராதனா கடலுக்கு இருக்கிறாள்' என்பதில் எனக்கு பெருமை. அவள் வழிநடத்தும் சிட்டுக்குருவி கூட்டம் 'நெகிழி' அரக்கனிடம் இருந்து கடலை காப்பாற்றும்!'
ச.பூ.அரவிந்த் தருண்ஸ்ரீ
90031 22231
