PUBLISHED ON : அக் 25, 2026

மனம் துலக்கும் விளக்குகள்
'செயல் வேறு, சொல் வேறு' என வாழ்வோரின் நட்பு கனவிலும் துன்பம் தரும்' என்கிறது 'கனவினும் இன்னாது மன்னோ...' குறள்.
திரையிலும், அரசியல் களத்திலும் இருந்து ஈர்ப்போர் மீது கண்மூடித்தனமாய் ஆர்வம் கொண்டு வாழ்விழக்க விரும்பாத இவர்கள், கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி யின் இளங்கலை இரண்டாமாண்டு மாணவ மாணவியர்! இவர்களின் விளக்குகள் யார்?
'பிளஸ் 2 பொதுத்தேர்வு தருணத்தில் தன் தந்தையை இழந்தான் என் நண்பன்
சுதர்சன். துயர மனதோடு தேர்வுகளை எழுதியவன், சிறந்த மதிப்பெண்கள் பெற்று
ஆச்சரியப் படுத்தினான். இன்று, பெங்களூரில் தன் மேற்படிப்பினுாடே 'ஸ்டார்ட்
அப்' ஒன்றை நிர்வகித்து, 'நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' எனும்
உண்மைக்கு உதாரணமாக வாழ்ந்து என்னை அன்றாடம் வியக்க வைக்கிறான்!'
டி.ஷனட், பி.காம்.,
'தான் விமானியாக பணிபுரிந்த 'ஏர் ஏசியா' நிறுவனத்தின் பாதுகாப்பு விஷயங்களில் நிகழ்ந்த தவறுகளை, பொது வெளியில் பேசியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த கவுரவ் தனேஜா. ஆண்டிற்கு மூன்று கோடி ரூபாய் தனக்கு வருமான இழப்பு என்று அறிந்திருந்தும், தன் சுயநலனை பின்தள்ளி நியாயத்தின் பக்கம் நின்ற அவரது அறம் சார்ந்த குணம் என்னை செதுக்கும் உளி!'
வ.சம்யுக்தா, பி.பி.ஏ.,
'நல்வாய்ப்பாக என் சிறுவயதில் வறுமையை சந்தித்தேன்; அதனால் தான், எளிய மக்களும் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் 'தைராய்டு' பரிசோதனைகளைச் செய்யும் 'தைரோகேர் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தை என்னால் உருவாக்க முடிந்தது' என்பார் டாக்டர் ஆ.வேலுமணி. வாழ்வின் எந்த ஒரு துயரத்தையும் விதையாக மாற்ற முடியும்' எனும் பாடத்தை எனக்குச் சொன்ன ஆசிரியர் அவர்!'
க.ஸ்ரீமதி, பி.காம்.,
