PUBLISHED ON : ஆக 09, 2026

உக்கிர புன்னகை
'கேள்விப்பட்டது சரிதான்; இந்த சாமியோட மீசை கத்தி மாதிரிதான் இருக்கு.
நெற்றி நிறைய திருநீறு, அதுல சிவப்பு சூரியன் மாதிரி பொட்டு... செம' -
சுதையின் விழிகளுக்கு நிகராய் ஆச்சரியத்தில் விரிகின்றன நம் விழிகள்.
இடம் - கடலுார் விருத்தாச்சலத்தை அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் ; ஆச்சரியம் தந்தவர்... முனீஸ்வரன். இங்கு கொளஞ்சியப்பராக அருள்பாலிக்கும் முருகன், பக்தர்களின் பிராது மனுக்களுக்கு தீர்வு தரும் நீதிபதியாக இருக்கிறார்; 'பிராதின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் விசாரணை அதிகாரி முனீஸ்வரன்' என்பது மக்களின் நம்பிக்கை!
முனீஸ்வரனின் தோள்வரை தொங்குகிறது சுருட்டை முடி; தலையில் அழகிய வேலைப் பாடுடன் கிரீடம்; ஓங்கியிருக்கும் வலக்கையில் வெட்டரிவாள்; இடக்கை 'கதை' பிடித்திருக்க, கழுத்தில் கடிகை; பட்டு வேஷ்டி தரித்த இடையில் கலைநயமிக்க கச்சை!
முனீஸ்வரன் 'காவல் வீரன்' என்பதற்கு கட்டியம் கூறும் தோள்வளை, மணிக்கட்டு காப்புகள், குறுவாள், முறுக்கு மீசை, உருட்டும் விழிகள் அனைத்தும் 'உக்கிரம்' சொல்லினும், தடித்த உதடுகளுக்குள் இருந்து முத்துப் பற்கள் எட்டிப் பார்க்கும் வகையில் முனீஸ்வரனை புன்னகை பூக்கச் செய்த சிற்பியின் திறன் பாராட்டுக்குரியது!
அர்த்தஜாம வேளையிலும், அகிலம் உறங்கும் அதிகாலையிலும் காவல் வீரனாய் வலம் வருபவன்; பக்தர்களின் குறைகளை நேரில் சென்று பார்ப்பவன் என்பதால், விரிந்த தோள்களுடன் கட்டுமஸ்தாக முனீஸ்வரனை படைத்திருக்கும் சிற்பி, அங்கவஸ்திரத்தை முனீஸ்வரனின் கைகளில் தவழ விட்டு ராஜ கம்பீரம் தந்திருக்கிறார்.
