PUBLISHED ON : அக் 18, 2026

தினமலர் வாசிக்கும் முதல்வர்
செய்தி: கட்டுமான தொழிலாளியான தாய் நாகஜோதி மின்சாரம் தாக்கி பலியாக, 'கட்டுமான தொழிலாளர் நலவாரிய நிவாரண நிதி'க்கு விண்ணப்பித்து ஐந்து ஆண்டுகளாக தவிக்கும் மூன்று பிள்ளைகள்!
அக்டோபர் 4, 2026ல் வெளியான நமது 'முதல்வரே...ஒரு நிமிஷம்' பகுதியில், புதுக்கோட்டை, காமராஜபுரம் பகுதியில், மே 8, 2021ல் கட்டட வேலைக்குச் சென்ற தன் தாய் நாகஜோதியின் உயிரை உயர் மின் அழுத்த கம்பி காவு வாங்கியதையும், 'பணியிடத்து விபத்து மரணம்' நிவாரணம் கேட்டு ஐந்து ஆண்டுகளாக காத்திருப்பதையும் சொல்லி...
'கையறு நிலையில் நிற்கிறோம்; உரிய நிவாரணம் தந்து நீங்களாவது எங்கள் வாழ்வில் மாற்றம் தருவீர்களா' என்று முதல்வரிடம் உருக்கமாக நீதி கேட்டிருந்தார் நாகஜோதியின் இளைய மகள் யோகேஸ்வரி.
இச்செய்தி வெளியான சில மணி நேரத்திற்குள்...
அரசு நடவடிக்கை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலர் கே.வீரராகவ ராவ், துறை ஆணையர் மா.வள்ளலார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவின்படி, செய்தி பிரசுரமான அக்.,4, காலை 9:00 மணிக்கே அரசு தரப்பில் இருந்து அழைப்பை சந்தித்திருக்கிறார் யோகேஸ்வரி!
மறுநாள் காலை 10:30 மணிக்கு, புதுக்கோட்டை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையர் கார்த்திகேயனை அவர் சந்திக்க, நிவாரணத்தொகை அளிப்பதற்கான நடைமுறைகள் மின்னல் வேகத்தில் அரங்கேறி இருக்கின்றன. அக்டோபர் 9ம் தேதி மாலை 6:00 மணிக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வரவானது.
ஆம்... முதல்வர் சி.ஜோசப் விஜயின் அரசு, ஐந்தாண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது; நாகஜோதியின் மூன்று பிள்ளைகள் கணக்கிலும் இத்தொகை வரவு வைக்கப்பட்டது.
*யோகேஸ்வரியின் நன்றி: 'தினமலர்' நாளிதழே... எங்கள் குறையை உனக்கு நாங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், எங்கள் குறை அறிந்து தேடி வந்து உதவி இருக்கிறாய். மக்கள் நலனுக்காக உழைக்கும் முதல்வருக்கு, 'மக்கள் நாளிதழ்' செய்யும் மகத்தான உதவி இது. ஐந்தாண்டுகள் காத்திருப்பை ஐந்து நாட்களில் தீர்த்து வைத்த உனக்கு நாங்கள் ஆயுள் முழுக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
முதல்வர் விஜய் அண்ணா... தொடர்ந்து 'தினமலர்' வாசியுங்கள். எங்களைப் போன்றோரின் கண்ணீர் துடையுங்கள். தாங்கள் எனக்கு தந்திருப்பது நிவாரணம் அல்ல... என் திருமணத்திற்கான சீர்; நன்றி அண்ணா.
