PUBLISHED ON : ஜூன் 28, 2026

தாய் - மகன் பாசத்தின் மாறுபட்ட பரிமாணம்
பள்ளி செல்லும் வயதிலுள்ள மகன் சிறை சுவரில் கிறுக்கிய ஓவியங்களின் பின்னணியை, கைதியான அந்த தாய் மகனுக்கு விவரிப்பதாக முதல் காட்சி. விடுதலைக்குப் பின் தாயும், மகனும் கடந்தகால சுவடுகளை மறைத்து புதுவாழ்வு தேடுகின்றனர். மகனை காக்க தாயும், தாயுடன் சேர மகனும் முயற்சிக்கும் சூழலை உருவாக்கி உருக வைக்கிறது மிச்ச கதை!
மனதின் அடியாழத்தில் கடந்த காலத்தை புதைத்து, சமூகத்துடன் தங்களது எல்லைகளை சுருக்கி தாயும் மகனும் காட்சிக்கு காட்சி வலம் வருவது மனதில் பெரும் பாரம் ஏற்றுகிறது. வெற்றிடங்களை வழங்காத பின்னணி இசையும், தொடர்ச்சியான உரையாடல்களும் திரைக்கதையில் இருப்பினும், தாயும், மகனுமாக நடித்திருப் பவர்கள் உணர்ச்சிகள் வழியே அடர்ந்த மவுனத்தை நமக்குள் கடத்துகின்றனர்!
குற்றவாளி தாய் மற்றும் சிறைக்குள் பிறந்து வளர்ந்த மகனின் உளவியல் வெளிப்பாடுகளே கதையின் சம்பவங்கள்; அன்பின் ஒளி மின்னும் கண்களில் கள்ளம் மறைந்திருக்கும் நடிப்பை சிறுவன் ஆதிசேஷனிடம் இருந்து என்ன சொல்லி பெற்றாரோ இயக்குனர் சிதம்பரம்; அசத்தி இருக்கிறான் சிறுவன்!
'நம்மை அவர்கள் கொன்று விட்டால்' என்று அச்சப்படும் மகனை ஆற்றுப்படுத்தாது, 'அதற்குமுன் நான் அவர்களை கொன்று விடுவேன்' என்று வீரம் பகிரும் தாயாக பர்சானா; மகனை காக்க எந்த எல்லைக்கும் செல்லும் அவரது தாய்மையின் மகுடத்தில் வைரக்கல்லாய் க்ளைமாக்ஸ்!
இரு கதாபாத்திரங்களை மட்டுமே சுற்றிச் சுழலும் கதையில் தலைகாட்டிச் செல்லும் துப்பாக்கி பாட்டி, மனப்பிறழ்வு பெண் உள்ளிட்ட சிறு பாத்திரங்கள் கூட அழுத்தமாக வடிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் பாதியில் வரும் 'ப்ளாஷ்பேக்' பகுதி சிறுவன் எதிர்கொண்ட சூழல்களை விளக்கினாலும், அதன் மிகுதியான நீளம் சிறு குறை!
சந்தர்ப்பவசத்தால் வாழ்வின் பள்ளத்தில் வீழ்ந்த பாசத்தாயும் மகனும், பாதுகாப்பான வாழ்க்கைக்கு போராடும் தவிப்பை மிகவும் வீரியமாக தந்திருக்கிறார் இயக்குனர்.
ஆக...
புறத்தில் அழவில்லை, பதறவில்லை; ஆனால், நம் அகத்தில் இவ்வுணர்வுகள் மீட்டப்படுகின்றன
