PUBLISHED ON : நவ 15, 2026

அர்த்தநாரீஸ்வரர்; ஓருடலில் இருபால் பாவனைகள் காட்டிட வேண்டும்; வலப்புறம்
வன்மையும் இடப்புறம் மென்மையும் காட்டி வியக்க வைக்கும் வித்தைகள்
அறிந்திருக்க வேண்டும்.
'இச்சவாலை சோழ சிற்பிகள் அதீதமாய் விரும்பினர்' என்கின்றன தஞ்சை - திருவையாறு வழியில் கண்டியூரில் இருக்கும் ஸ்ரீ பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில் சிற்பங்கள்!
வழக்கமாக கருவறை கோஷ்டத்தில் ஒய்யார மாக நிற்கும் மாதொரு பாகனை, இதில் அமர்ந்த நிலையில் வைத்து வித்தியாசம் காட்டியிருக்கிறார் சோழ சிற்பி! மூன்றடி உயரத்தில், 'உத்குடிகாசன' நிலையில் சிற்பியின் சிந்தையில் உதித்த மா தொருபாகன், தன் அளவில் சிறுத்திருந்தாலும் காண்பவரின் பேரனுபவத்திற்கு சிறு குறையும் வைக்கவில்லை!
தலை சூழ்ந்திருக்கும் கிரீடம், வலப்புறம் ஜடாமகுடமாகவும், இடப்புறம் கரண்ட மகுடமாகவும் ஜாலம் காட்ட, வலது காதில் நாக குண்டலமும், இடது காதில் வாலிகா குண்டலமும் கூடுதல் அழகு தந்திருக்கின்றன. ரிஷபத்தின் தலையில் ஒய்யாரமாக ஓய்வுகொள்ளும் கை, கீழ் தொங்கும் கால் என வலதுபாக உறுப்புகளில் பருமன் கூட்டி அர்த்தநாரியை வலிமையானவராய் காட்டியிருக்கிறார் சிற்பி.
இடது பாகத்தில் மடங்கியிருக்கும் தொடை, அத்தொடையில் நிலைகொண்டு நீலோற்பவ மலர் பற்றியிருக்கும் இடக்கை விரல்களில் அப்படி ஒரு வனப்பு; இவ்வனப்பில் ததும்புகிறது மாதொருபாகனின் மீதான சோழ சிற்பியின் காதல்!
'சிவனுக்கு தோலாடை, உமைக்கு பட்டாடை என்பதோடு திருப்தியுறவில்லை சிற்பி. ஆடை பற்றும் வலப்புற இடை, விலாவுக்கு கீழ் உள் ஒடுங்கும்படியும், இடப்புற இடை சற்றே பெருத்து கொடியிடை தோற்றம் கொடுக்கும் படியும் வசீகரம் செய்திருக்கிறது அவரது விரல் வித்தை' என்கிறார் தமிழ் பேராசிரியர் எழிலரசன்.
